வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

இடைகாடர்

நவக்கிரக நாயகர்கள் தம் குடிசைக்கு வந்ததைக் கண்டு இடைக்காடர் போரானந்தம் அடைந்தார். ஐயோ என்ன விந்தை இது விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்துள்ளீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இந்த ஏழையிடம் என்ன இருக்கப் போகிறது வரகு ரொட்டியும், ஆட்டுப் பாலும்தான் உள்ளன. இவை எளிய உணவு என்று இகழாதீர்கள். என் உயிரைக் கலந்து நான் தருகிறேன். இவ்வுணவை உண்டு சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள். பிறகு பேசுவோம் என்று தம் குடிசைக்கு வந்த நவக்கிரக நாயகர்களை உபசரித்தார்.



சித்தரான இடைக்காடரின் வேண்டுதலை மறுக்க முடியாது நவக்கிரக நாயகர்களும் அவர் அளித்த வரகு ரொட்டிகளை உண்டு ஆட்டுப்பாலைப் பருகினார். எருக்கிலைச் சத்து நிறைந்த பால் என்பதால் அதை அருந்தியதும் நவக்கிரக நாயகர்கள் மயங்கி விழுந்தனர். கிரக நாயகர்கள் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்டதும் இடைக்காடர் அவை யாவும் எந்தெந்த இடத்தில் இருந்தால் மழை பொழியுமோ அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்துவிட்டார்.
உடனே வானில் கருமேகங்கள் திரண்டு இருண்டது. மழை பொழிந்தது. வறண்ட பூமி குளிர்ந்தது. ஆறு, குளம், குட்டைகள் என யாவும் நிரம்பி வழிந்தன. மயக்கம் தெளிந்து விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள் தாங்கள் இடம் மாறி அமைந்திருப்பதைக் கண்டு திகைத்தனர். நொடியில் அவர்களுக்கு இது சித்தர் செய்த அற்புதம் என்பதை உணர்ந்தனர். நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கிய இடைக்காடரின் நுண்ணறிவை மெச்சிய அவர்கள் அவர் வேண்டிய வரங்களை அளித்து விடைபெற்றுச் சென்றனர்.
இதனால் இடைக்காடரின் புகழ் பாரெங்கும் பரவியது. அவரைத் தரிசிக்கவும், உபதேசம் பெறவும் உலகில் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் பெருந்திரளாக வந்து கூடினர்.
ஒரு முறை திருமாலை வழிபடுவோர்க்கு ஓர் ஐயம் உண்டானது. திருமால் பத்து அவதாரம் எடுத்துள்ளாரே இதில் எந்த அவதாரத்தை வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்று ஆலோசித்தனர். இதற்கான விடை காணாது தவித்த திருமாலின் பக்தர்கள் சித்தரிடம் இதற்கான விடையைப் பெற்றிடலாம் எனக் கருதி இடைக்காடரிடம் வந்து கேட்டனர். ஆனால் சித்தர் பெருமானாகிய இடைக்காடரோ, ஏழை இடையன் இளிச்சவாயன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
தங்கள் ஐயப்பாட்டுக்கு விடை தேடி வந்த திருமால் பக்தர்களுக்கு சித்தரின் பதில் சட்டெனப் புரியவில்லை. நீண்ட நேரம் யோசித்தனர். பின் இடையன் என்றால் கிருஷ்ணர், இளிச்சவாயன் என்றால் நரசிம்மர், ஏழை என்றால் சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த இராமன் என்று முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீ கிருஷ்ணபகவான், நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ இராமபிரான் ஆகிய மூவரையும் வழிபட்டால் விரைவில் இறையருள் கிட்டும் என்பதை உணர்ந்து தெளிந்தனர். தங்களது ஐயப் பாட்டை எளிதில் தீர்த்தருளிய இடைக் காடரின் நுண்ணறிவைப் போற்றி மகிழ்ந்தனர்.
இடைக்காடர் வாழ்ந்த காலம் கடைச்சங்க காலம் என்றும், திருவள்ளுவ மாலையில், கடுகைத் துளைத்து, ஏழு கடலைப் புகுத்தி என துவங்கும் திருக்குறளின் பெருமைகளைப் பறைசாற்றும் பாடல் இவர் பாடியது என்றும் கூறுவர்.
இவர் குலசேகர பாண்டியன் காலத்தவர் என்றும், கபிலருடன் சேர்ந்து பாண்டிய மன்னரைக் காண வந்தபோது மன்னர் மரியாதை செய்யாததால் அங்கிருந்து கோபித்துக் கொண்டு சென்று விட்டார் என்றும், இடைக்காடர் சென்றதைத் தொடர்ந்து கபிலர் உள்ளிட்ட சங்கப் புலவர்களும் உடன் நீங்கினர் என்றும் கூறப்படுகிறது. இதனைக் கண்டு மனம் வருந்திய பாண்டிய மன்னர் இடைக்காடரிடம் தம் தவறை மன்னித்தருளுமாறு வேண்டி அவரை உரிய மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வரப் பிற புலவர் பெருமக்களும் அரசவைக்குத் திரும்பினர் என்றும் கூறுவர். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இப் பாடல்களைப் பாடிய இடைக்காடர் வேறு நபர் என்று கூறுவோரும் உள்ளனர்.
கேரளத்தில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் பிறந்து ஊசிமுறி என்ற நூலை இயற்றியவர் இவரே என்றுரைப்போரும் உண்டு. ஒரு சிலர் இவர் திருமாலின் அவதாரம் என்றும்கூடக் கூறியுள்ளனர்.தம்முடைய ஞானசூத்திரம் 70 என்ற நூலின் காப்புப் பாடலில் இடைக்காடர்,


காப்பு முதல் காட்சி என்று கடைசியில் நின்று
கடைச் சரக்கைக் கண்டுகொள்ளக் காப்பிற் பாடி
காப்பு முதல் முதற்சேர்த்து நடுவில் நின்று
கணபதி தாளிரு சரணம் காப்பாம் என்று
காப்பு முதல் மூலர் கோரக்க நாதர்
கமலமுனி போகரிஷி பாதங் காப்பு
என்று பாடியுள்ளார். இதனால் போகமுனிவரே இவரின் குருநாதர் என்றும், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடைக்காடருக்கு மெய்ஞ்ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவரே என்றும் உறுதிபடக் கூறப்படுகிறது. இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதி கொண்டுள்ளார் என்று போகர் ஜனன சாதரத்தில் கூறப்பட்டுள்ளது

சட்டைமுனி

சட்டை முனி சித்தர் அற்புத வரலாறு

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்

தியானச் செய்யுள்

சித்த வேட்கை கொண்டு

சிறந்து விளங்கிய சீலரே

அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற

அற்புத மூர்த்தியே

எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்

ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!

இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்

சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்.சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டுத் தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்துபிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்ட காரணத்தால் விவசாயக்கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின்வாசல்களில் தட்டை ஏந்தி யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுவட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர்விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டுநீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும்.சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார்.



சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனைஆலயம் சென்று தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம்நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிபடத்  தவறவில்லை. ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டுவெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்துஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதறிட எண்ணமில்லையா? ‘

சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில்வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்றுதாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். இவரை ‘கயிலாயச் சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளிச் சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்.. சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை.இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்” என்றார்.

அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்துசித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார். போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞானநிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். இவரின் தவத்தால்கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்...

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.

சட்டைமுனி இயற்றிய நூல்கள்:

சட்டைமுனி நிகண்டு – 1200

சட்டைமுனி வாதகாவியம் – 1000

சட்டைமுனி சரக்குவைப்பு – 500

சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500

சட்டைமுனி வாகடம் – 200

சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200

சட்டைமுனி கற்பம் – 100

சட்டைமுனி உண்மை விளக்கம் – 51

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.


மச்சமுனி

மச்சமுனி சித்தர் வரலாறு :


சித்தர்கள் யுகங்கள் பல கடந்து தம்முடைய தேகத்தை கல்பதேகமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவார்கள். திரேதாயுகத்தில் அப்படி அபூர்வமாக வாழ்ந்த சித்தர்களில் மச்சரிஷியும் ஒருவர். மச்சமுனி, மச்சேந்திரர், மச்சேந்திரநாதர் என்ற பெயர்களெல்லாம் கொண்ட சித்தர் ஒருவரே. ஓர் இடத்தை விட்டு வேறு ஓர் இடத்துக்குச் செல்லும் போதும், ஒரு காலட்டத்தைக் கடந்து வாழும் போதும் பெயர்கள் தான் வேறுபடுகின்றன. தலையில் சடைமுடியுடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, கையில் ஒரு பிரம்புத்தடியுடன் ஒரு சாமியார் இருந்தால், அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள், அவரை சடைசாமி என்று அழைப்பார்கள். ஒரு சிலர் அவரை விபூதி சாமி என்ற சொல்வார்கள். சிலர், பிரம்ரபு சாமி என்பார்கள். இதேபோல ஊர்ப் பெயரை வைத்து பூண்டிமகான், திருவலச்சித்தர் என்ற பெயர்களும் உண்டு. சித்தர்களுக்கு, உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன் என்பது கொள்கையாகும். சித்தர்களுடைய பெயர்கள் எல்லாம் அவர்களாக வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் அதில் அக்கறை காட்டுவதுமில்லை. தூல உடம்புக்கு எந்தப் பெயர் வைத்தால் என்ன என்று இருப்பார்கள். மச்சமுனி, அகத்தியர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு சமயம், கடற்கரை யோரத்தில், சிவபெருமான், உமையம்மைக்கு தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அம்மைக்கு உறக்கம் வந்துவிட்டது. அக்கடலில் வசித்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்த கருவானது, இம்மந்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. பின் வெளியே வந்த அந்த மீன் வயிற்றுப் பிள்ளைக்கு சிவபெருமான், மச்சர் என்ற பெயரைக் கொடுத்தார். மச்சரின் உருவத்திலிருந்து தலை மனித வடிவமும், உடல் மீனின் வடிவமும் கொண்டது என்ற குறிப்பு, நமக்குக் கிடைக்கிறது. முழவதும் மனித வடிவம் கொண்டதே மச்சரின் உருவம் என்ற கருத்தும் நிலவுகிறது.
                                இது மச்சமுனியின் அவதார வரலாறு. பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. அவர் நீண்ட நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டார். அட்டமா சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். ஊர் ஊராக சஞ்சாரம் செய்து வரும்போது ஓர் ஊரில், இவர் உணவு வேண்டி ஒரு வீட்டின் முன் நின்றார். இவருக்கு பிச்சையிட்ட அந்த வீட்டுப் பெண் இவரை வலம் வந்து வணங்கினாள்.அந்தப் பெண்ணனின் முகவாட்டத்தைப் பார்த்த சித்தர், என்ன காரணம் என்று கேட்டார். தனக்கு வெகு காலமாக புத்திரப்பேறு வாய்க்கவில்லை என்று தன் மனக்குறையைக் கூறி, தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு அந்தப் பெண் சித்தரை வேண்டினாள்.
மச்சமுனி, அவளுடைய நிலைக்கு இரக்கங்கொண்டு விபூதி பிரசாதம் கொடுத்து இதனை நீ உட்கொள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இந்தப் பெண் விபூதியைப் பெற்றுக் கொண்டு தனது பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் நடந்தவற்றைக் கூறினாள். அவள் இந்த முனிவர் மாய வேஷக்காரன். விபூதி கொடுத்து உன்னை மயக்கி, தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடுவான் என்று கூறினாள். அந்தப் பெண் விபூதியை அடுப்பிலிருந்த நெருப்பில் போட்டுவிட்டாள். பின்பு அடுப்புச் சாம்பலை அள்ளி வீட்டின் புழக்கடையில் கொட்டிவிட்டு இந்த நிகழ்ச்சியை அறவே மறந்துபோய்விட்டாள். வருடங்கள் சில சென்றன. மச்சமுனி மீண்டும் அவ்வழியே வந்து தான் விபூதி கொடுத்த அந்தப் பெண் வீட்டின் வாசலில் நின்று அவளை அழைத்து உன் பிள்ளையை நான் பார்க்க வேண்டும், அழைத்து வா என்றார். அந்தப் பெண் உண்மையை மறைக்காது நடந்தவற்றை அப்படியேக் கூறினாள். அந்த அடுப்புச் சாம்பல் எங்கே என்று மச்சமுனி வினவ, தன் வீட்டுப் புழக்கடையில் உள்ள குப்பையைக் காட்டினாள். மச்சமுனி அந்த இடத்துக்குச் சென்று கோரக்காவா என்று குரல் கொடுத்தார். அங்கே ஓர் அதிசயம் நடந்தது. சாம்பல் குப்பையிலிருந்து, சித்தர் விபூதி கொடுத்த காலம் முதல், பிள்ளையை அழைத்த காலம் வரை உள்ள ஆண்டுகள் நிரம்பிய வயது கொண்ட சிறுவன் ஒருவன், ஏன்? என்று பதில் குரலுடன் வெளியே வந்தான். அந்தச் சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் சித்தர். சிறுவனோ தான் மச்சமுனியையே குருவாகக் கொண்டு அவரைத் தொடர்ந்து வர விரும்புவதாகக் கூறினான். அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சமுனி. இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். நீண்ட நெடுங்காலம் பாரதக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தவம் செய்தனர்.
                                      வட இந்தியாவில் வாழ்ந்த நவநாத சித்தர்களில் இவரும் ஒருவராக மச்சேந்திர நாதர் என்ற பெயரில் குறிக்கப்படுகிறார். மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் தற்போது திருப்பரங்குன்றம் வரை பெயர் கொண்ட தலத்தில், முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றம், முருகப்பெருமானின் அருள் கூடிய அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பெருமை பெற்றது நாம் அறிந்ததே. மச்சமுனியைக் குருவாகக் கொண்ட கோரக்கரும் சித்திகள் பல அடைந்து சிறப்பு பெற்றவர். இவரும் வடநாட்டில் கோரக்கநாதர் என்ற பெயருடன் குறிக்கப்படுகிறார்.
இந்தியாவில் உள்ள கோரக்பூர் என்னும் நகரப் பகுதியில் இவர் வாழ்ந்ததாகவும், இவர் பெயராலேயே அந்த நகரம் குறிக்கப்படுகிறது என்றும் ஒரு செய்தி உண்டு. சீனா, நேபாளம் ஆகிய இடங்களில் கோரக்கர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இலட்சுமி நரசிம்மன் என்னும் பெயர் கொண்ட மன்னன், நேபாளத்தை ஆட்சி செய்தான். மரப்பலகைகளால் கோரக்கநாதருக்கு அவன் ஒரு கோயில் கட்டியதாகவும், அக்கோயிலுக்கு கஸ்தமண்டபம் என்ற பெயர் இருந்ததாகவும், இப்பெயரே நாளடைவில் காட்மண்டு என்று மருவியதாகவும் நம்பப்படுகிறது. காட்மண்டுவில், கோரக்கர் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் ஆலயம் ஒன்று உள்ளது தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது.கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது. கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள பொய்கை நல்லூரில், சமாதி நிலை எய்தினார் என்ற செய்தி பெரும்பான்மையாக உறுதி செய்யப்படுகிறது
மச்சமுனி சித்தர்
                            மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள்! அதிலும் மச்சமுனியின்  பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காது?அதற்கு ஏது மொழியறிவு? அதனால் எப்படிக் கேட்க முடியும்? _ என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள் மூட்டுபவை. ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம் பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன. எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள். அவர்கள் வரையில் அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம் இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்... அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த மீன்.
                          கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது! இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற மச்சமுனி. இவரால் கோரப் பெற்றவர்தான், கோரக்கர். எப்படி? மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள்
                                     அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ‘‘நில் தாயே..’’ _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ‘‘பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?’’ _ மச்சமுனிதான் கேட்டார். ‘‘நான் வணங்க நீர் என்ன தெய்வமா?’’ _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ‘‘தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..’’ என்றார்.
‘‘அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?’’_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. ‘‘இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...’’ ‘‘இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?’’ ‘‘சாம்பல் தானம்மா... இருந்தாலும் ‘இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்’’ என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ‘‘கையில் என்ன?’’ கேட்டாள். ‘‘விபூதி..’’ கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ‘‘இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும்.
                                       இதை வீசி எறி..’’ _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்? சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ‘‘விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?’’ என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ‘‘உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..’’ என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ‘‘தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே’’_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...’’ என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார்.
பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர்.
                                        அதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். அதில் ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும் அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார்.
மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் ‘எனக்கு மேலும் வடை தேவை’ என்றார். கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். ‘சுட்டுத்தாருங்கள் தாயே’ என்று மன்றாடினார். ‘‘ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..’’ என்றாள், அவள். ‘‘இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்’’ என்றார், கோரக்கர். ‘‘உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்?’’ _ எகத்தாளமாய் கேட்டாள். ‘‘அதற்கென்ன தந்தால் போச்சு..’’ என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள்.
                                      கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ‘‘கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்?’’ ‘‘ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.’’ ‘‘அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?’’_என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். கோரக்கரும் பார்வை பெற்றார். அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார். காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது. அல்லமத்தேவர் ஓர் அபூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும்.
மொத்தத்தில் இயற்கையின் பல பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர். அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது. கோரக்கரே இவரை வெட்டியவர். தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார். பின்னாளில் பிரம்ம முனியின் நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது.
கபால தீட்சை
மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” நூலில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தீட்சை முறையினை இன்று பார்ப்போம். இந்த தீட்சை முறைக்கு “கபால தீட்சை” என்று பெயர். இதனை தன் நூலில் பின்வருமாறு மச்சமுனி குறிப்பிடுகிறார்.சென்றிடுங் கபால தீட்சையைக் கேட்டிடு
நின்ரிடு மூச்சியில் நினைவாய் றீம்என்றும்
சென்றிடு நெற்றியில் சுருள ஓம்என்றிடு
கன்றிடு கண்டத்தில் கலந்த அங்கென்றிடே" 
- மச்சமுனி -
மங்கென்று மார்பி லமர்ந்திடு சிங்கென்று
வங்கென்று உந்தியில் வணங்கி யிருந்திடு
சிங்கென்று மூலந் திறந்து வலுத்திடும்
பொங்கும் கபாலம் பொருந்திய தீட்சையே" 
- மச்சமுனி -
சாதகரின் உச்சியில் "றீம்" என்ற மந்திரத்தினையும்,புருவ மத்தியில் "ஓம்" என்ற மந்திரத்தினையும்,கண்டத்தில் அதாவது தொண்டையில் "அங்" என்ற மந்திரத்தினையும், மார்பில் "மங்" என்ற மந்திரத்தையும்,நாபியில் "சிங் வங்" என்ற மந்திரத்தையும் உணர்ந்து தியானிக்க மூலம் திறக்கும் என்கிறர். இதுவே கபால தீட்சை ஆகும்.  இந்த கபாலதீட்சையினால் விளைவது என்ன?, அதனை பின்வருமாறு விளக்குகிறார்.
பொருந்திய தீட்சையைப் புனிதம தாக
வருந்து யெந்நாளும் வணங்கி யிருந்திடு
திருந்திய தேகஞ் சிவகயி லாசமாம்
இருந்திடு மந்த ஏகாந்த மாகவே"
  - மச்சமுனி -
ஆகமா யந்த அருள்சிவ சக்தியை
பாகமாய் நீயும் பணிந்து வணங்கியே
ஏகமாய் நின்று இணங்கிய தீட்சையை
தாகமாய்ச் சொல்லி சாத்து வீபூதியே"
- மச்சமுனி -
மேலே சொன்ன கபாலதீட்சையை மனதால் உணர்ந்து தினமும் தியானித்து வந்தால் தியானிப்பவர் உடலானது கைலாசம் போல் ஏகாந்தமாய் நிற்குமாம். இவ்வாறு எகாந்தமாய் இருக்கும் உடலுடன் சிவ சக்தியை பணிந்து வணங்க வேண்டுமாம்.   மேலும் தினமும் இந்த கபால தீட்சையை மனதால் உணர்ந்து தியானித்து வரும் வேளையில், தியானம் முடிவடைந்ததும் தீட்சையின் பலன் உடலில் தங்க வேண்டும் என்று ஒருமனதாய் வேண்டி வீபூதியை சாத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.
மச்சமுனி... 
சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்துநிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் னம்பாளின் தரிசனாத்தால்
பாருலகை மறந்ததொரு சித்தனாமே
- அகத்தியர் 12000 -
இவர் காக புசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு  உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து  இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள  பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப்  படுகிறது. 
மச்சமுனி சூத்திரம் 21
மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30
மச்சமுனி பெரு நூல் காவியம் 800
மச்சமுனி வைத்தியம் 800
மச்சமுனி கடைக் காண்டம் 800
மச்சமுனி சரக்கு வைப்பு 800
மச்சமுனி திராவகம் 800
மச்சமுனி ஞான தீட்சை 50
மச்சமுனி தண்டகம் 100
மச்சமுனி தீட்சா விதி 100
மச்சமுனி முப்பு தீட்சை 80
மச்சமுனி குறு நூல் 800
மச்சமுனி ஞானம் 800
மச்சமுனி வேதாந்தம் 800
மச்சமுனி திருமந்திரம் 800
மச்சமுனி யோகம் 800
மச்சமுனி வகாரம் 800
மச்சமுனி நிகண்டு 400
மச்சமுனி கலை ஞானம் 800
ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும்,
இத்துடன் இவர் மாயாஜாலங்களைப் பற்றி எழுதிய  மாயாஜால காண்டம் என்னும் நூலும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன,
திருப்பரங்குன்றத்தில்  சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும்,
மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும்  கூறப் படுகின்றது.