சனி, 21 ஜனவரி, 2017

சிவ வாக்கியர்

சித்தர்களுள் தலை சிறந்தவர்களாக கருதப்படும் இவர் தாயுமானவர்,பட்டினத்தார் ஆகியோரால் பாராட்டப்பட்டவர்.

பஞ்சாட்சர உண்மையையும்,அதன் வகைகளையும்,சிவனையும்,ராமனையும் மிகவும் அழகாக சொல்லி இருப்பவர்.



"சிவாயம் என்ற அட்சரம்
சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புவோர்க்கு
உண்மையான அட்சரம்
கபாடம் அற்ற வாசலைக்
கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே
சிவாயம் அஞ்சு எழுத்துமே"

சங்கர குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்தவர் சிவவாக்கியர்.
பிறக்கும் போதே "சிவ சிவ"என்ற நாமத்தை உச்சரித்து கொண்டே பிறந்ததால் சிவவாக்கியர் என்று பெயர்.

இளம் வயதிலேயே மகா தத்துவத்தையும்,கால தத்துவத்தையும் நன்கு உணர்ந்த சிவவாக்கியர் மன்மதனையும் வெல்லும் வடிவழகோடு திகழ்ந்தவர்.

பதிணெண் சித்தர் மரபில் வந்த ஒரு குருவை நாடி வேத நெறிகளை பயின்றார்.அவைகள் அவருக்கு உடன்படாமல் போகவே தம் கருத்துகளுக்கு விளக்கம் தர தகுந்த ஒரு குருவை எதிர் நோக்கி காத்திருந்தார்.
இந்நிலையில் காசியின் பெருமை பற்றி பலர் சொல்ல கேட்டு அங்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் உண்டாயிற்று சிவவாக்கியருக்கு.
உடனே புறப்பட்டார் காசி தரிசிப்பதற்க்கு.அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் வசித்து வந்தார்.செருப்பு தைப்பது அவரது தொழிலாக இருந்து வந்தது.கால்களை பார்த்தே அவரவருக்கு தக்கபடி காலணிகளை செய்து கொடுப்பது வழக்கம். மூச்சு காற்றை கட்டுபடுத்தும் பிராண வித்தை பயின்றவர் அவர்.

அவரது வித்தையை பார்த்து பாராட்டுபவர்கள் சிலர்.தொழிலை பார்த்து பழிப்பவர்கள் சிலர்.உண்மையை உணர்ந்தவர்கள் அவரை போற்றினர்.விவரம் அறியாதவர் பலர் அவரை இகழ்ந்தனர்.
சித்தரோ பாராட்டுவதை கேட்டு மனம் மகிழவும் இல்லை.பழி சொல்லை கேட்டு மனம் குன்றவும் இல்லை.தமக்கு ஏற்படும் புகழ்ச்சி இகழ்ச்சி எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அதை அலட்சியம் செய்து,நல்ல குணங்கள் நிறைந்தவராக காணப்பட்டவரின் சிந்தனை முழுவதும் ஒரு நல்ல சீடனை எதிர்பார்த்து கொண்டிருந்தது.

இச்சித்தரின் பெருமைகள் காசிக்கு வந்த சிவ வாக்கியர் காதுகளுக்கு எட்டியது.அவரை எப்படியும் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் இருக்கும் இடத்தை விசாரித்து கொண்டு அங்கு போனார்.

தம் இருப்பிடம் தேடி வந்த சிவ வாக்கியரை அன்புடன் வரவேற்றார் சித்தர்.சிவ வாக்கியருக்கு அவரை கண்டதும் தமக்குள் ஈர்ப்பு சக்தி ஏற்பட,அவருக்கு அருகில் போய் நெருங்கி நின்றார்.ஒரு பலகையை போட்டு அதன் மேல் உட்காரும்படி சொன்னார் சித்தர்.

சித்தர் பார்வையில் இருந்த கனிவும்,பேச்சில் இருந்த இனிமையும்,உபசரிப்பில் இருந்த அன்பும் இவையணைத்தும் சிவ வாக்கியரை எளிதில் கவர அப்பலகையில் அமர்ந்தார் அவர்.
பலகையில் அமர்ந்த உடனே அவருக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது.மிகப் பெரிய ஞானவிளக்கின் அருகில் இருப்பது போல் தோற்றம்.சொல்ல முடியாத ஒரு ஆனந்தத்தை அனுபவிப்பது போல் ஓர் உணர்வு.

சிவ வாக்கியருக்கு அவர் ஒர் மகாயோகியாக இருக்க வேண்டும் என்பது போல் தோன்றியது.
சிவ வாக்கியரை மேலும் கீழுமாக பார்த்த சித்தர் தம் ஞானத்தை பெருமளவிற்க்கு சிவ வாக்கியருக்கு பரிபக்குவம் இருக்கிறதா என்று அறிய விரும்பினார்.

சிவ வாக்கியர் செருப்பு தைக்கும் தொழில் செய்து சம்பாதித்த காசு என்னிடம் இருக்கிறது.இதை எடுத்து கொண்டு போய் என் தங்கையான கங்கா தேவியிடம் கொடுத்து விடு...என்று சொன்னவர்,தன் பக்கத்திலுள்ள பேய் சுரக்காய் ஒன்றை சிவ வாக்கியரிடம் தள்ளி,"இதோ இந்த பேய் சுரக்காய் கசப்பாக இருக்கிறது.வரும் போது இந்த கசப்பையும் கழுவி கொண்டு வர முடியுமா உன்னால்?...என்று கேட்டார்.

சித்தர் தரிசனத்தில் தன்னையே இழந்துவிட்ட நிலையில் இருந்த சிவ வாக்கியர் தன் வயபட்ட நிலையில் மறுப்பு ஏதும் சொல்லாமல் சித்தர் தந்த காசையும்,பேய் சுரக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கையை நெருங்கினார்.கங்கையில் இறங்கி தண்ணீரை தொட்டார்.மறுநிமிடமே சுழல் சுழன்று பெருக்கெடுத்தோடும் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்கரம் ஒன்று வெளியில் வந்தது.அவரிடம் நீட்டியது கையை.சிவ வாக்கியர் அக்கையில் காசை வைக்க உடனே அக் கை வளையல் ஓசையுடன் தண்ணீரில் மறைந்தது.

இதை கண்டு எந்தவித ஆச்சிரியமும்,அதிர்ச்சியும் அடையாத சிவ வாக்கியர் தான் கொண்டு வந்த பேய்சுரக்காயை நீரில் கழுவி கொண்டு போய் சித்தரிடம் வணங்கி கொடுத்தார்.
சிவ வாக்கியரின் பக்குவ நிலையை மறுபடியும் சோதிக்க நினைத்த சித்தர் புன்முறுவல் ததும்ப,"சிவ வாக்கியா நான் அவசரப்பட்டு விட்டேன்.என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்த காசு எனக்கு திரும்ப வேண்டுமே.என் தங்கை மிகவும் வைத்தீகமானவள்.அவள் இதோ இந்த தோல் பை தண்ணீரில் தோன்றுவாள்.நீ அங்கே கொடுத்த காசை இங்கே கேள்"
என்று சிவ வாக்கியரை தூண்டினார் சித்தர்.

சிவ வாக்கியரும் எந்த வித சலனுமின்றி அதன்படியே கேட்டார்.சித்தர் செருப்பு தொழிலாக வைத்திருந்த தோல் பையில் இருந்து வளையல் அணிந்த அதே கை வெளியில் வந்து சிவ வாக்கியர் கையில் காசை கொடுத்துவிட்டு மறுபடியும் தோல் பையில் மறைந்தது.அப்போது சிவ வாக்கியர் சிறிதும் ஆச்சிரியப்படவில்லை.

அதை கண்ட சித்தரின் உள்ளம் மகிழ்ந்தது.தன் சீடன் பரிபக்குவம் அடைந்துவிட்டான் என்று தீர்மானித்து எனக்கேற்ற மாணவன் கிடைத்துவிட்டான் என்று அன்போடு சிவ வாக்கியரை தழுவி ஆசீர்வதித்தார்.
இருப்பின் கங்கையில் வளை கையில் காசை வைக்கும் போதும் சரி,தோல் பையில் வளை கையில் காசை வாங்கும் போதும் சரி,அந்த ஸ்பரிசத்தால் ஒரு கணம் சிவ வாக்கியரின் மேனி சிலிர்த்ததை உணர்ந்த சித்தர்.சிவ வாக்கியருக்கு பெண்களின் மேல் உள்ள ஆசை முற்றிலும் போய் விட வில்லை என்பதை உணர்ந்தார்.

அந்த பேய்சுரக்காயையும் கொஞ்சம் மணலையும் எடுத்து சிவ வாக்கியரிடம் நீட்டிய சித்தர்"அப்பா,சிவ வாக்கியா...முக்தி நிலை தித்திக்கும் வரை சில காலம் இல்லறத்தில் இரு.இந்த இரண்டையும் கலந்து எந்த பெண் உனக்கு சமைத்து தருகிறாளோ அவளை திருமணம் செய்து கொள்"என்று கட்டளை இட்டார்.

தன் மனதுக்குள் இத்தனை காலம் இருந்த குறை அது தான்.தனக்குள் இல்லற நாட்டம் ஏற்பட்டுள்ளதை அவர் எவ்வாறு உணர்ந்தார்?இதுவரை வியப்பே ஏற்படாத சிவ வாக்கியருக்கு முதன் முதலாக வியப்பு ஏற்பட்டது.

குருவின் பாதம் வணங்கி அவர் தந்த பொருட்களோடு சிவ வாக்கியர் அங்கிருந்து புறப்பட்டார்.சென்ற இடமெல்லாம் குரு உபதேசப்படி தவம் செய்தார்.தவ ஞானம் பெற்றார்.அவர் நாவில் கலைமகள் நடனம் புரிந்தாள்.தானறிந்த அனுபவித்த அற்புதங்கள் எல்லாம் பாடலாக பாட தொடங்கினார்.தத்துவ பாடல்கள் மூலம் மக்களுக்கு சிந்தை தெளிவித்தார்.

ஆண்கள் பலர் அதனை அலட்சியம் செய்தனர்.பெண்களின் சிலரோ சிவ வாக்கியரின் வாக்கை கவணிக்காமல் இளமையும் அழகும் ததும்பும் அவர் உடம்பிலே தன் கவனத்தை குவித்தனர்.

சிவ வாக்கியர் அவர்களிடம் இதோ இந்த மணலையும்,பேய் சுரக்காயையும் யார் சமைத்து தருகிறார்களோ அவர்களை நான் திருமணம் செய்து கொள்வேன்.மறுக்கமாட்டேன் என்று சொல்லி தன்னிடம் இருந்த மணலையும்,சுரக்காயையும் காட்டினார்.

இளமையையும் அழகும் நிறைந்த சிவ வாக்கியரை ஆவலோடு நெருங்கிய பெண்கள் அந்த கேள்வியை கேட்டதும் ஓடி ஒழிந்தனர்.

நடக்கிற காரியமா இது?....எங்களை அவமதிக்கிற செயல் இது என்று அங்கிருந்த பெண்கள் அவரை ஏளனம் செய்து ஒதுக்கினார்கள்.

எண்ணத்தில் தூய்மை இருந்தால் எதுவும் நடக்கும் இல்லாவிட்டால் இப்படி எதுவும் செய்ய முடியாது என்பதை சொல்லி விட்டு சிவ வாக்கியர் தன் பயணத்தை தொடர்ந்தார்.

அறிவு தீ மூட்ட பட வேண்டுமெனில் அதற்க்கு அறிவார்த்தமான கேள்விகள் எழுப்ப பட வேண்டும்.யார் அந்த கேள்விக்குறிய விடையை தருவது?....
பலர் அவரை சித்தர் என்றனர்.ஒரு சிலர் அவரை பித்தர் என்றனர்.இன்னும் சிலர் சிவ வாக்கியரை புத்தி பேதலித்து விட்டது என்றனர்.

சிவ வாக்கியரை பார்த்ததும் அவசர அவசரமாக தாங்கள் பாதையை வேறு வழிக்கு மாற்றினர்.இதையெல்லாம் லட்சியம் செய்யாமல் சிவ வாக்கியர் தன் வழியே போய் கொண்டு இருந்தார்.

ஒரு நாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிகுறவர்கள் வசிக்கும் பகுதிக்கு நுழைந்தார்.அப்போது அங்கிருந்த கூடாரம் ஒன்றில் இருந்து வெளியே வந்த கன்னி பெண் ஒருத்தி சிவ வாக்கியரை கண்டாள்.கண்டதும் அவளது உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி ஒதுங்கி நின்றாள்.

"பெண்ணே !வீட்டில் பெரியவர்கள் யாருமில்லையா?"என்று கேட்ட சிவ வாக்கியரிடம் அந்த பெண் பணிவாக சொன்ன பதில்."சுவாமி...தாங்கள் யாரென்று தெரியவில்லை.என் பெற்றோர்கள் மூங்கில் வெட்ட போயிருக்கிறார்கள்.அதை வெட்டி பிளந்து கூடை,முறம் செய்து பிழைப்பது தான் எங்கள் தொழில்.தங்கள் கட்டளை எதுவாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றி வைக்க சித்தமாய் இருக்கிறேன்."



"சாப்பிட்டு பல நாள் ஆயிற்று.எனக்கு பசி தாங்கவில்லை.இதோ என்னிடம் இருக்கும் பேய்சுரக்காயையும்,கொஞ்சம் மணலையும் சமைத்து எனக்கு உணவளிக்க முடியுமா?" உன்னால் என்று சிவ வாக்கியர் கேட்டார்.
இதை கேட்ட அந்த பெண் மற்ற பெண்களை போல அவரை ஏளனம் செய்து ஒதுங்கி விட வில்லை.இது நடக்க கூடியதா?....என்று நினைக்கவும் இல்லை.முனிவர் சொல்கிறார் அவர் சொல்படியே நடப்பது நம் கடமை.நடப்பது எதுவாயினும் நடக்கட்டும் என ஒப்புக் கொண்டு சிவ வாக்கியரிடமிருந்து அவைகளை பெற்றுக் கொண்டு சமைக்கத் தொடங்கினாள்.

என்ன ஆச்சர்யம் அவள் உலையிலிட்ட அடுத்த கணமே அந்த மணல் அருமையான சாதமாக மாறியது.சுரக்காய் ருசி மிகுந்த உணவாகவும் மாறியது.

சமையலை வெகு விரைவில் இனிதே முடித்த அவள் வெளியில் வந்து "சுவாமி உணவு தயாராகி விட்டது.சாப்பிட வாருங்கள் என பணிவுடன் அழைத்தாள்.சிவ வாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள்.

சிவ வாக்கியருக்கு ஆச்சர்யம்...இப்படியும் ஒரு பெண்ணா?... ஒரு வார்த்தை கூட ஏன் ?...எதற்க்கு?....என்று கேட்காமல்...எதிர்த்து பேசாமல் சொன்னதைச் செய்து முடித்துவிட்டாளே...இவள் தான் தன் குருநாதர் சொன்ன பெண் என்று எண்ணியவராய் உள்ளம் குளிர உணவு உண்ட சிவ வாக்கியர் அதன் பிறகு அங்கே ஒரு ஓரமாக உட்கார்ந்தார்.

அந்த சமயம் காட்டிற்கு மூங்கில் வெட்டப் போனவர்கள் திரும்பி வந்துவிட்டனர்.சிவ வாக்கியரை பார்த்ததும் யாரோ ஒரு தவ முனிவர் தங்கள் வீட்டிற்க்கு வருகை புரிந்திருப்பதை கண்டு பய பக்தியுடன் அவரை வணங்கி,"சுவாமி தங்கள் பாதம் ஏழையின் குடிசையில் பட நாங்கள் என்ன தவம் செய்தோமோ!"என்று சொல்லி அவரது பதிலை எதிர் பார்ப்பது போல் கைகள் குவித்து நின்றார்கள்.

சிவ வாக்கியர் அவர்களிடம்,"அப்பா,நான் இப்போது தான் உணவு உண்டேன்.தவம் செய்யும் எனக்கு துணையாக ஒரு பெண்ணை தேடினேன்.உயர்ந்தவர்களோ என்னை ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டார்கள்.நீங்கள் எல்லாம் உள்ளத்தால் உயர்ந்தவர்கள்.பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப் பெண்ணோ நான் சொன்ன கட்டளைக்கு மறுப்பேதும் சொல்லாமல் நிறைவேற்றி விட்டாள்.நான் அவளை என் வாழ்க்கை துணைவியாக அடைய விரும்புகிறேன்.அவளை எனக்கு மணம் முடித்துக் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் விருப்பம்.இதில் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்".என்று கூறி முடித்தார்.

குறவர்களும்,"சுவாமி தங்களை போன்றவர்களுக்கு எங்கள் குல பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது நாங்கள் செய்த புண்ணியமே.இருந்தாலும் தாங்கள் எங்களுடனே தங்கி இருப்பதாக இருந்தால்....எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை"என்று தங்கள் நிபந்தனையை கூறினர்.

சிவ வாக்கியர் இதற்க்கு மறுப்பேதும் சொல்லாமல் அவர்களது நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்.அங்கேயே அவர்களது குல வழக்கப்படி திருமணம் நடந்தது.
இல்லறத்தை ஏற்றுக் கொண்டாலும் சிவ வாக்கியரின் தவம் நின்றுவிட வில்லை.அவருடைய தவத்திற்க்கு அவர் மனைவியும் துணையாக நின்றாள்.சிவ வாக்கியர் குறவர் குல தொழிலையையும் கற்றுக் கொண்டார்.

ஒரு நாள் சிவ வாக்கியர் மூங்கில் வெட்டுவதற்காக காட்டிற்க்கு சென்றார்.அங்கே பருத்த மூங்கில் ஒன்றினை வெட்டும் போது,வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடி பொடியாக தங்க துகள்கள் சிதறி விழ ஆரம்பித்தது.
இதை கண்ட சிவ வாக்கியர் மனம் துணுக்குற்றது.இறைவா சிவ பெருமானே!என்ன இது?நான் உன்னிடம் முக்தி அல்லவா கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.அதனை அருளாமல் எனக்கு இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா?....
செல்வம் சேர்த்தால் கவலையும் கரைபுரண்டு வந்துவிடுமே....என இறைவனிடம் முறையிட்டு விட்டு ஓடி போய் தூரத்தில் நின்று கொண்டு இதை பார்த்தார்.

சிவ வாக்கியரின் புலம்பலையும்,அச்சத்தையும் கண்டு என்னமோ ஏதோ என்று அங்கு ஓடி வந்த சில நரிக்குறவ இளைஞர்கள் என்ன....?..ஏது?....என்று விசாரிக்க,சிவ வாக்கியர் பதட்டத்துடன்,"அதோ மூங்கிலிருந்து மனிதர்களை கொல்லும் ஆட்கொல்லி வந்தது.அதை பார்த்து தான் பயப்படுகிறேன்".என்றார் உதிர்ந்து கிடக்கும் தங்கதுகள்களை காட்டி.
ஓடி வந்த அந்த நான்கு இளைஞர்களுக்கும் எளிதில் விபரம் புரிந்தது.சரியான பைத்தியக்காரன் இவன்.வாழத் தெரியாதவன் என்று மனதிற்குள் சொல்லி கொண்டு,"ஆமாம்...ஆமாம் ஆட்கொல்லி தான்.நீங்கள் இங்கு இருந்தால் அது உங்களையும் கொன்று விடும்.உடனே இங்கிருந்து ஓடி போய்விடுங்கள்" என்று சிவ வாக்கியரை அங்கிருந்து விரட்ட,சிவ வாக்கியர் அங்கிருந்து பயந்தோடி போய்விட்டார்.

அதற்குள் நால்வரும் அந்த இடத்திற்கு போய் தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டுவதற்குள் இருட்டி விட்டது.வேறு வழியின்றி இரவு பொழுதை காட்டிலே கழித்துவிட்டு விடிந்ததும் செல்லலாம் என தீர்மானித்தனர்.
பசியின் காரணமாக இரண்டு பேர் பக்கத்து கிராமத்திற்கு சென்று வயிறார சாப்பிட்டு விட்டு மற்ற இருவருக்கும் உணவு வாங்கி கொண்டு வரும் வழியில் அவர்கள் மனதில் ஓர் எண்ணம்."தாங்கள் எதற்கு நல்லவர்கள் போல் பங்கு போட்டு கொள்ள வேண்டும்? இருப்பதை இருவர் மட்டுமே எடுத்து கொண்டால் என்ன?என்று நினைத்தவர்கள் தாங்கள் வாங்கி கொண்டு வந்த உணவினில் விஷத்தை கலந்து கொண்டு மற்ற இருவர் இருக்குமிடம் வந்தார்கள்.

தங்கத்தை காவலிருந்த அந்த இருவரும்,"எங்களுக்கு மிகவும் தாகமாக இருக்கிறது,அதோ எதிரில் இருக்கும் கிணற்றில் இருந்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்"என்று சொல்ல இருவரும் உணவு பொட்டலங்களை கொடுத்துவிட்டு கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க சென்றனர்.

கிணற்றின் அருகே சென்றதும் கிணற்றில் எந்த அளவிற்க்கு தண்ணீர் இருக்கிறது என்பதை எட்டிப் பார்த்து கொண்டு இருக்கும் போது மூட்டை காவலிருந்தவர்கள் மிக வேகமாக ஓடி வந்து அவர்களின் கால்களை வாரி கிணற்றுக்குள் பிடித்து தள்ளி விட்டனர்.
அத்தோடு முடிந்தது இருவரின் கதை.
அப்பாடா...ஒழிந்தார்கள் இருவரும்.இனி கவலை இல்லை.தங்கத்தை நாம் இருவரும் பங்கு போட்டு கொள்ளலாம்.முதலில் சாப்பிட்டு விடலாம் என்று தங்களுக்காக வாங்கி வந்த உணவு பொட்டலங்களை அவித்து உண்டார்கள்.சற்று நேரத்தில் விசம் தலைக்கேறி இருவரும் மடிந்தார்கள்.
மறுநாள் பொழுது விடிந்தது.வழக்கம் போல மூங்கில் வெட்ட வந்த சிவ வாக்கியர்,இறந்து கிணந்த நான்கு பேரையும் பார்த்தார்."ஐயோ ஆட்கொல்லி அநியாயமாக நான்கு பேரையும் கொன்றுவிட்டதே...."என்று வருந்தியபடி மூங்கில் வெட்ட போய்விட்டார்.

ஒரு நாள் சிவ வாக்கியர் கீரை பிடிங்கி கொண்டு இருக்கும் போது வான் வழியே சென்று கொண்டிருந்த சித்தர் சிவ வாக்கியரின் தவ ஒளியை கண்டு திரும்பிப் பார்க்க இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி கொண்டு சந்தித்து பேசி கொண்டனர்.

அது முதல் கொங்கனர் அடிக்கடி சிவ வாக்கியரை பார்ப்பதற்கு வர ஆரம்பித்தார்.அவர் வரும் பொழுதெல்லாம் சிவ வாக்கியர் மூங்கிலை பிளப்பதும்,முறம்,கூடைகள் பின்னுவதுமாக இருந்தார்.தங்கம் செய்யும் வித்தை தெரிந்தும் ஏன் இந்த மகான் வறுமையில் உளல வேண்டும் என்று எண்ணி கொங்ஙனர் சிவ வாக்கியர் இல்லாத சமயத்தில் அவர் வீட்டிற்கு வந்து அவர் மனைவியை அழைத்து,"அம்மா....உபயோகப்படாத இரும்பு துண்டுகள் ஏதாவது வீட்டில் இருந்தால் கொண்டு வா"என்றார்.
சிவ வாக்கியர் மனைவி வீட்டிற்குள் சென்று இங்கும் அங்குமாய் தேடி சில இரும்பு துண்டுகளை கொண்டு வந்து கொங்கணரிடம் கொடுக்க,அதை அவர் தங்கமாக மாற்றி அவரிடம் கொடுத்து விட்டு மறைந்தார்.

வீடு திரும்பிய சிவ வாக்கியரிடம் அவர் மனைவி கொங்ஙணவர் வந்தது முதல் நடந்த அணைத்தையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார்.
சிவ வாக்கியர் அவற்றை கையால் தொடக்கூட மறுத்து "அம்மா ஆளை கொல்லும் ஆட்கொல்லி இதை உடனே பாலும்கிணற்றில் போட்டு விடு"என்றார்.பதி சொல் தட்டாத அந்த பதிவிரதையும் உடனே அந்த த
ங்கத்தை கொண்டு போய் கிணற்றில் போட்டு விட்டு திரும்பினாள்.




பகல் நேரம்...உச்சியில் சூரியன் தகித்து கொண்டு இருந்தான்.ஒரு சமயம் தன் மனைவியின் விருப்பத்தின் பேரில் அந்த தங்கம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் சிவ வாக்கியருக்கு ஏற்பட்டது.ஒரு கல்லின் மேல் சிறுநீரை கழித்து விட்டு அதன் பிறகு மனைவியை அழைத்தார்.அவள் வந்ததும்,"தேவி...அந்த கல்லின் மேல் தண்ணீரை கொட்டி விடு"என்று சொன்னார்.

அவள் தண்ணீரை கொண்டு வந்து அந்த கல்லின் மேல் கொட்டியதும் குபு குபுவென புகை எழுந்து மறைந்தது.புகை அடங்கியதும் பார்த்தால் அந்த கல் தங்க பாளமாக மாறியது.

தன் மனைவியிடம்,"வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்"என்றார்.
குறவர் குலத்தில் பிறந்த அந்த குலமகளோ அந்த தங்கத்தை கையால் கூட தொடவில்லை...."சுவாமி எனக்கு தங்களின் மாறாத அன்பு இருந்தால் அதுவே போதும்.இந்த தங்கம் தேவையில்லை.என்னை பொருத்தமட்டில் தாங்கள் கூறியது போல் ஆட்கொல்லி தான் இது என்று கூறிவிட்டாள்.

சிவ வாக்கியர் மனம் மகிழ்ந்து மனைவியை பாராட்டினார்.குருநாதர் கட்டளைப்படியே இல்லறம் மேற்கொண்டிருப்பதில் சிவ வாக்கியருக்கு நிறைவாக இருந்தது.இல்லறம் நல்லறமாக தொடர்ந்தது.

ஒருநாள் சிவ வாக்கியர் முறம் முடைத்து கொண்டிருக்கும் வேளையில் சில சிவ பக்தர்கள் அவரை நெருங்கி,"சுவாமி சித்தர் தரிசனம் கோடி பாவ நாசம்"என்பார்கள்.எங்கள் பாவங்களை போக்கி கொள்ள சித்தர்களை தரிசனம் செய்து கொள்வதற்க்கு எங்களுக்கு ஏற்பாடுகளை செய்யுங்களே "என்றார்கள்.

சிவ வாக்கியர் அவர்கள் எண்ணம் புரிந்தது."ஐயா!சித்தர்கள் தெய்வ மயமானவர்கள்.அவர்களை நீங்கள் ஏன் தேடுகிறீர்கள்?ஆசாபசங்களில் சுற்றி சுழலும் உங்களால் அவர்களை நெருங்க முடியுமா? அப்படியே நெருங்கினாலும் அவர்கள் சொல்வதை கடைபிடிக்க முடியுமா?...நீங்கள் சரியாக கடைபிடிக்காவிட்டால் அவர்கள் சாபத்திற்கு ஆளாக நேருமே...ரிஷிகள்,முனிவர்கள் சாபத்திற்கு கூட விமோச்சனம் உண்டு.சித்தர்கள் சாபத்திற்கு விமோச்சனம் கிடையாது"என்றார்.
"நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்.நாங்கள் சித்தர்கள் காண்பதற்கு காரணம் அவர்கள் செய்யும் சித்து விளையாட்டுகளை காண்பதற்காக.அதன் மூலம் தங்கம் செய்யும் வித்தையை அறிந்து,அதனால் உலகிலுள்ள வறுமையை ஒளிக்க போய்கிறோம்.என்றார்கள் வந்தவர்கள்.
சிவ வாக்கியருக்கு அவர்களுடைய நோக்கம் தெள்ள தெளிவாக தெரிந்தது. இறைவனையும் அவனால் படைக்கப்பட்ட பஞ்ச பூதங்களையும் உள்ளபடி உணர்ந்த சிவ வாக்கியருக்கு அவர்களது உள்ளத்தில் உள்ளது தேறியாமல் போகுமா?...அவர் சிரித்துவிட்டார்.

"ஐயா...உங்களைப் போன்றவர்கள் இதுபோல யாராவது வருவார்கள்.தொல்லை கொடுப்பார்கள் என்று பயந்து தான் அவர்கள் உங்கள் கண்களில் படாமல் இருக்கிறார்கள்.தங்கம்....தங்கம் என்று பொன்னாசை பிடித்து அலைபவரிடம் தங்கம் தங்காது.அதனால் அவர்களுக்கு கெடுதல் தான் விளையும்.பாகப்பிரிவினை ,குடும்ப ஒற்றுமை குலைவது போன்ற காரணங்களால் வழக்குக்காக நீதி மன்றம் போய் நிற்பார்கள்.எத்தனையோ பாவங்கள்,எத்தனையோ களவு நடந்து கொண்டிருக்கும்.இந்த பாவங்களுக்கெல்லாம் நாம் ஏன் ஆளாக வேண்டும் என்று எண்ணித்தான் சித்தர்கள் உங்கள் கண்களில் படுவதில்லை"என்றார்.

இரசவாத கொள்கையை தெரிந்து கொண்டு அதன் மூலம் தங்கம் செய்து கொள்ளலாம் என்று தப்பு கணக்கு போட்டு வந்தவர்கள் தப்பாமல் முன் வந்து விழுந்த இந்த அறிவுரைகளை கேட்டு தலை குனிந்து நின்றார்கள்.
'அன்பர்களே!உங்களின் பொன்னாசை பொருளாசையை ஒழியுங்கள்.சித்தத்தை சிவனிடம் வையுங்கள்.பிறகு நீங்களே தங்கமாக மாறிவிடுவீர்கள்.இதுதான் தங்கத்தை அடைய சுலபமான சிறந்த வழி என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

ஞான மார்கத்தில் திகழ்ந்த சித்தரான சிவ வாக்கியரை தேடி நாளும் புதிய சீடர்கள் வந்த வண்ணமாக இருந்தனர்.அவர்களிடம் சேர்ந்தவர்கள் திரும்ப திரும்ப ரசவாத வித்தை செய்ய விரும்ப ஆர்வம் காட்டினார்களே தவிர ஆத்மார்த்தமான அறிவை பெற எவரும் முன் வர வில்லை.

தேடி வருபவர்கள் எல்லாம் அவர்களிடம் ஞானம் தேடுவதை விட தங்கத்தை தேடுவதில் அக்கரை காட்டினர்.இது சிவ வாக்கியருக்கு மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கியது.

அவரை சந்திக்க வரும் கொங்கணவ சித்தரை பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது அவர்களது சீடர்களின் மனதில்.அவரை பார்க்க அவர்கள் விரும்புவதற்க்கு காரணம் அவரிடம் ரசவாத வித்தையை அறியத்தான்.

சிவ வாக்கியருக்கு மனதிற்குள் சிரிப்பு வந்தது.தங்கத்தின் மீது பற்றற்றவருக்கே தங்கத்தினை உருவாக்கும் ரச வாதம் சித்தியாகும்.சித்தர்கள் பலருமே ரசவாத வித்தையில் தேர்ந்தவர்கள் தான்.அவற்றையெல்லாம் பற்றி தாங்கள் அறிந்த அனுபவங்களை இந்த பிரபஞ்சத்திற்கு காணிக்கையாக்கிவிட்டு போயிருக்கின்றனர்.
இதனை கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருப்பது போல் தான் தோன்றும்.அது ஒரு மாயை தான்.யோக நெறியில் நின்று ரசவாதம் செய்பவர்கள் தேவர்களுக்கு நிகரானவர்கள்.அத்தகைய தவ வலிமையையும்,யோக நெறியும் உடைய சித்தர்களுக்கு தான் ரசவாதம் சித்திக்கிறது.அவர்களின் கண்ணுக்கு தான் சித்தர்கள் தென்படுவார்கள்.
பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தியினால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம்.தமது கடுந்தவத்தாலும் யோகத்தினாலும் பெற்ற சித்திகள் அனைத்தையும் பலவீனமான மனிதர்களுக்கே அர்பனம் செய்துள்ளனர்.சித்தரை போல் நாம் மேன்மை நிலை அடைய விரும்புகிறோமா,அல்லது பலவீன மனிதர் நிலையே போதும் என்று நினைக்கிறோமா?

சிவ வாக்கியர் இறைவனது எண்ணத்தில் ஆழ்ந்தார்.உள்ளம் உருகியது.தன் அனுபவங்களையெல்லாம் பாடல்களாக ஆக்கினார்.சிவ வாக்கியரால் உருவான அப்பாடல்கள் அனைத்தும் சிவவாக்கியம் என்று அழைக்கப்பட்டது.
சிவ வாக்கியர் கும்பகோணத்தில் சித்தி அடைந்ததாக கூறப்படுகிறது.இன்றும் பௌர்ணமி நாட்களில் கும்ப கோணத்தில் அவர் சமாதி பூஜை நடைபெற்று வருகிறது.

ஞானத்தை அடைவதற்காகத் தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தவம் முடிவதற்குள் இறந்து போய் விட்டார்.அவர் தான் சிவ வாக்கியராக வந்து பிறந்தார் என்று ஒரு வரலாறு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக