சனி, 24 செப்டம்பர், 2016

முதல் சித்தன்

மதுரை சோம சுந்தர கடவுள்

மதுரை நகரில் குடி கொண்டுள்ள சோமசுந்தர கடவுளே முதல் சித்தனாக அவதரித்தார் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.



இங்கு நாம் அறிந்து கொள்ளவிருக்கும் சித்தர்கள் பலருக்கும் இவரே மூல குருவாக இருந்து ஞானத்தை போதித்து இருக்கிறார்.இதனை அந்தந்த சித்தர் பாடலில் மூலம் நாம் அறியலாம்.இப்பாடல்களின் சான்றுகள் சிவனை முதல் சித்தனாக உணர்த்துகிறது.

அவரது சித்து விளையாடல்கள் பல பல.இந்திர ஜாலம் போல் திடீரென பார்வைகளில் இருந்து மறைந்து போவார்.தூரத்திலுள்ள மலைகளை அருகில் வரச் செய்வார்.அருகே உள்ளனவற்றை தூரத்திற்கு செல்ல செய்வார்.முதியோரை இளைஞராக்குவார்.ஆணை பெண்ணாக்குவார்.பெண்ணை ஆணாக்குவார்.மலடியை மகப்பேறு உடையவளாக்குவார்.கூன்,குருடு,செவிடு,ஊமை,முடம் போன்றவற்றை பலரும் அறிய நீக்குவார்.

எட்டிமரத்தின் சுவை மிகுந்த பழங்களை பழுக்க செய்வார்.சீசன் இல்லாத நேரத்தில் ஆற்றில் நீரை பெருக்கெடுத்து ஓட செய்வார்.வயோதிகர்களின் முதுமை மனைவிகளை இளமையாக்கி கர்பம் தரிக்க திருநீரு கொடுப்பார்.ஆகர்ஷனம்,அதிரிச்சியம்,அஞ்சனம்,வசியம்,வாதம்,வயத்தம்பம், ஆகியவற்றை செய்வார்.இவ்வாறு அளவில்லாத சித்து வித்தைகளை சோமசுந்தர கடவுள் சித்தர் வடிவில் திருவிளையாடலாக புரிந்து கொண்டிருந்தார்.

மதுரை மன்னன் அபிஷேகப் பாண்டியனுக்கு இந்த செய்தி எட்டியது.இந்த அதிசய அற்பு செய்திகளை கேள்விபட்டு சித்தரை அழைத்துவருமாரு ஏவலர் சிலரை அனுப்பி வைத்தான் மன்னன்.சித்த மூர்த்தியின் திருவிளையாடலில் தங்களை மறந்து விட்ட அவர்கள் திரும்பாததை கணடு அமைச்சர்கள் சிலரை அனுப்பி வைக்கிறான் மன்னன்.
அமைச்சர்கள் சித்தரிடம் மன்னனின் அழைப்பை கூற,அவரோ"உமது மன்னனால் எனக்கு ஆகவேண்டியது என்ன?"என்று கூறி வர மறுத்து விட்டார்.அமைச்சர்கள் வந்து செய்தியை சொல்ல தன் தவறை உணர்ந்த மன்னன்"நாம் சென்று தான் அவரை அங்கு காண்பது தான் முறை.அவரை மதியாமல் அவரை இங்கு அழைத்து வர சொன்னோமே"என்று தன் தவறை உணர்ந்து திரு கோவிலுக்கு சென்று மதுரை நாயகனாம் சோம சுந்தர மூர்த்தியை வணங்கினான்.

பாண்டியனின் உள்ள குறிப்பினை உணர்ந்த சிவ யோகியாகிய சித்த மூர்த்திகள் அவருக்கு முன்னதாகவே தமது இந்திர விமானத்திற்கு வட மேற்கு திசையில் எழுந்தருளி இருந்தார்.
அரசன் அருகே வருவதை கண்டும் எவ்வித மரியாதையும் காட்டாது இறுமாப்புடன் அமர்ந்திருக்கும் சித்தரை அப்பால் போகும்படி காவலர்கள் துரத்தினர்.சித்தர் சிரித்தார்.அந்த சிரிப்பு மன்னனை சிந்திக்க வைத்தது.

பாண்டிய மன்னன் சித்தரை நோக்கி எழுப்பிய வினா...
"உமது நாடு எது?"....எந்த ஊர்?....என்ன பேர்?....எதற்காக இங்கே இருக்கிறீர்கள்?...என்று சரமாரியாக கேள்விகள் எழுந்தன மன்னனிடமிருந்து.

"அப்பா!யாம் எந்த நாட்டிலும்,எந்த ஊரிலும் திரிவோம்.யாம் இப்போது இருக்கும் தலம் காஷ்மீர நாட்டிலுள்ள காசி மாநகரம்.வித்தைகள் பல செய்து திரியும் சித்தர் யாம்.காடுகள் தொடங்கி ஆலயங்களை பல தொழ இங்கு வந்துள்ளோம்.மன்னனே!உம்மிடம் பெற வேண்டியது ஒன்றுமில்லை"புன்னகையுடன் பதில் வந்தது அவரிடமிருந்து.
அப்போதே இவருடைய சக்தியை சோதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மன்னனுக்கு வந்தது.

அப்போது வேளாளன் ஒருவன் ஒரு கரும்பினை கையில் கொண்டு வந்து வணங்கினான்.மன்னன் அக்கரும்பினை கையில் வாங்கி கொண்டு சித்தரை நோக்கி"வல்லவர்களில் உம்மை வல்லவராக நினைத்து கொண்டிருப்பவரே!இதோ இங்கே நிற்கும் கல்யானைக்கு இக் கரும்பை ஊட்டினால் நீர் எல்லாம் வல்ல சித்தர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.இம்மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோம சுந்தர கடவுள் நீரே என்று ஒப்புக் கொண்டு நீர் விரும்பியதை அளிப்பவன்" என்றான்.

அங்கிருந்த மண்டபத்தூணில் கம்பீரமாக செதுக்கப்பட்டிருந்த அந்த கல்யானையின் மீது சித்தர் சற்றே கடை  கண்ணால் பார்க்க என்ன ஆச்சரியம்!பார்த்தவுடனே அக்கல்யானை கண்ணை திறந்தது.வாய் திறந்து பிளறி தம் தும்பிக்கையினை நீட்டி பாண்டியன் கையிலிருந்த கரும்பை பற்றிக் கடைவாயில் வைத்து சாறு ஒழுகுமாறு மென்று தின்றது.



மீண்டும் சித்தர் அந்த கல்யானையை சிறிது கடை கண் பார்வை பார்க்க உடனே கல்யானை பாண்டியனின் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையை எட்டிப் பறித்தது.எதிர்பார்க்க செயலை கண்டு சீற்றமடைந்த மெய்காவலர்கள் யானையை அடிப்பதற்காக கோலினை ஓங்க கண்கள் சிவக்க யானையை பார்த்தார் சித்தர்.அவ்வளவு தான் அந்த முத்துமாலையை விழுங்கி விட்டது.சித்தரின் மேல் பாண்டியனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.

அரசனின் மெய்காவலன் சித்தரை அடிக்க வந்தான்.சித்தர் புன்னகை புரிந்தவாறே அவனை நில் என்று கூற மெய்காவலன் உட்பட மற்ற காவலர்கள் அணைவரும் அசையாது அப்படியே கற்சிலை போல் நின்றனர்.

இதை கண்ட பாண்டியன் சித்தரின் திருவடிகளில் விழுந்து தன்னை மண்ணிக்கும் படி வேண்டினான்.
அவன் அன்புக்கு மனமிரங்கிய சித்தர்"வேண்டும் வரத்தை கேள்"என்றார் அவனிடம்.மன்னனோ தனக்கு புத்திர பாக்கியம் அளிக்க வேண்டும் என்று வணங்கி தொழ அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்து தம் திருகரத்தை யானையின் மேல் வைத்தார்.

உடனே கல்யானை தனது துதிக்கையை
நீட்டி முத்துமாலையை மன்னனிடம் கொடுத்தது.முத்துமாலையை பெற்றுக் கொண்டு திரும்பிய பாண்டியனின் பார்வையிலிருந்து சித்தர் மறைந்தார்.ஆம் அங்கு சித்தரை காணவில்லை யானை தன் பழைய வடிவத்தை அடைந்திருந்தது.
இவையெல்லாம் இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்து வேத நாயகனாகிய சோம சுந்தர கடவுளை மீண்டும் வந்து வணங்கி விட்டு அரண்மனை வந்தான்.

சித்தரின் அருளால் அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்னும் புதல்வனுக்கு தந்தையாகும் பாக்கியம் கிட்டியது.நீண்ட நாள் அரசாட்சி செய்து விட்டு பின்னர் சித்தரின் திருவருட்பார்வையில் விளைந்த பேரின்பத்தில் இரண்டற கலந்துவிட்டான் மன்னன்.

இறைவன் சித்தராக வந்து பாண்டியன் கூறியதன் பேரில் கல்யானைக்கு கரும்பு கொடுத்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கல்யானைக்கு கரும்பருத்திய பணலமாக குறிப்பிடபட்டுள்ளது.

நடன நங்கைக்கு உதவிய நடராஜன்


பாண்டிய மன்னன் திருப்பூவனம் எனும் சிவத்தலத்திலேயே பொன்னனையாள் எனும் கணிகை ஒருத்தி இறைபணி செய்து வந்தாள்.அவள் ஏழிசை யாழை இசைத்து பாடுவதிலும் பரத கலையிலும் சிறந்தும்,அழகிலும் பிறவற்றிலும் ரம்பையை போல் விளங்கினாள்.சிவப்புண்ணிய நெறியில் நெறிபிறழாத ஒழுக்கத்தை மிகவும் கடைபிடித்து வந்தாள்.
நாள் தோறும் வைகறையில் எழுந்து தன் தோழியருடன் சென்று நீராடி சிவபூஜை முடித்துக்கொண்டு  திருகோவிலுக்கு சென்று திருபூவனநாதரை வணங்கி சுத்த நிருத்தம் ஆடி விட்டு ,பின் தன் இல்லத்திற்கு வந்து சிவனடியார்களுக்கு திருவமுது படைத்து விட்டு அதில் எஞ்சியதை தாமும் புசிப்பதையே வழக்கமாக கொண்டிருந்த பொன்னனையாருக்கு நீண்ட நாள் ஏக்கமொன்று மனதிலே குடி கொண்டிருந்தது.

அதாவது சிவப் பெருமானினுடைய உற்சவ சிலையொன்றை செய்து திருபூவனம் கோவிலுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் அது.
ஆடல் பாடல் முதலியவற்றிலிருந்து வருகின்ற பொருள் மிஞ்சா நிலையில் எப்படி உற்சவர் சிலையை உருவாக்குவது என்று வருத்தத்துடன் காணப்பட்டாள்.

ஒரு நாள் சிவபெருமான் சித்தரை போல் வேடம் பூண்டு பொன்னனையாளின் தாதியர்,'ஐயனே திருவமுது செய்ய உள்ளே எழுந்தருள வேண்டும் 'என்று வேண்ட ,அதற்கு சித்தர் "உங்கள் தலைவியை இங்கே அழையுங்கள்"என கூற அவர்கள் தங்கள் தலைவியிடம் சென்று ,"ஓர் அடியார் சித்த மூர்த்தியாய் புன்னகை தவழ அமுது செய்யாது இருக்கிறார்"என்று கூற,பொன்னனையாள் விரைந்து வந்து சித்தருக்கு அர்க்கியமும்,ஆசனமும் அளித்து அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள்.

சோம சுந்தரகடவுளான சித்தர் இதனை கண்டு மகிழ்ந்து,"பொன்னனையாளே உமது வாட்டத்திற்கு என்ன காரணம்?"என்று வினவினார்.
"எம் பெருமானே,சிவ பெருமானின் உற்சவர் திரு ஒன்றினை உருவாக்க ஆசைப்பட்டேன்.வரும் பொருள் முழுவதும் ஏனைய செலவிற்கே போய்கின்றன.கொஞ்சமும் மிஞ்சுவதில்லை.எப்படி என் விருப்பம் நிறைவேறப் போய்கிறதோ,தெரியவில்லை"என்று கவலையுடன் கூறினாள்.

பொன்னனையாள் கூறியதை கேட்ட சித்தர் மிகவும் மகிழ்ந்து அவளது சிவ தருமத்தை போற்றி பாராட்டி"உன் வீட்டிலுள்ள பித்தளை,ஈயப் பாத்திரங்கள் அணைத்தையும் இங்கே கொண்டு வா"என்றார் சிரித்தவாரே.
அதன்படி பொன்னனையாள்
இரும்பு,செம்பு,ஈயம்,பித்தளை,செம்பு,வெள்ளி,தகரம் போன்ற எல்லா உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வந்து சித்தர் முன்பு வைத்தாள்.

அந்த பொருட்களின் மீது சித்தர் திருநீற்றினை தூவி மனதிற்குள் தியானித்து பிறகு அவளை நோக்கி ,"இவற்றை இன்றிரவு நெருப்பிலிட்டு எடுத்தவுடனே இது பொன்னாகிவிடும்.பிறகு இறைவனின் திருமேனியை வார்பிப்பாயாக"என்றார்.
பொன்னனையாள் ,"எம் பெருமானே,இன்று இங்கிருந்து திருவமுது செய்து கொண்டு இக்காரியங்களை முடித்து கொண்டு பொழுது புலர்ந்ததும் செல்வீராக"என்று வேண்ட சித்தரோ,"சன்யாசி இரா தங்க இயலாது"என்றார்.

"சரி....தாங்கள் யாரென்று கூறுங்கள்"என அதற்குள் அவர்,"நான் மதுரையில் வசிக்கும் சித்தன்"என கூறி விட்டு உடனே மறைந்தார்.
சித்தராய் வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்திலே திரு கூத்து ஆடியருளும் சோம சுந்தர கடவுளே என்று அக்கணமே உணர்ந்து இறைவனை கண்டு விட்ட மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினாள்.

சித்தரின் கட்டளைப்படியே அன்றிரவு அனைத்து உலோகங்களையும் தீயில் புடமிட அவையாவும் பொன்னாகின.
பொன்னனையாள் அந்த பொன்னைக் கொண்டு இறைவனுக்கு திருவடிவம் வார்த்தாள்.சிவ பெருமானின் பொற்சிலை அழகினை கண்டு ஆராதித்து,சொக்கி கிள்ளி முத்தமிட்டாள்.பிறகு அந்த திருவுருவத்தை திருபூவனம் அலையத்தில் பிரதிஷ்டை செய்து திருவிழாவும்,தேர் விழாவும் நடத்தினாள்.

அந்த அழகிய பொற்சிலையில் பொன்னனையாள் அள்ளி கிள்ளி முத்தமிட்ட நகக்குறியை இன்றும் ஆலயத்திற்கு சென்றால் காணலாம்.

இங்ஙனம் சித்தராய் வெளிகாட்டி அற்புதங்கள் புரிந்த சிவபெருமானையே சித்தருக்கும் சித்தராய் விளங்குகிறார்.அவர் செய்த சித்துக்கள் யாவையும் திருவிளையாடல்களாய் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சித்தரின் மாணவர்கள் எட்டு பேர் என்று கூறப்படுகிறது.சிவன் என்ற சித்த குருவிடம் உபதேஷம் பெற்ற அந்த எண்மர்.

நந்திகள் நால்வர்.(சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத் குமாரர்)
சிவயோக மாமுனி (அகத்தியர்)
பதஞ்சலி(பாம்பாட்டி சித்தர்)
வியாக்ரமர்(புலிப் பாணி சித்தர்)
திருமூலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக