திங்கள், 26 செப்டம்பர், 2016

போகர்

நவ நாதர்களில் ஒருவரான காலங்கியின் சீடரான இவர் சித்தர்களிலே முதன்மையானவர்.புலிப்பாணியின் குரு.இவரது பெற்றோர்கள் சீனாவில் பெண்களுக்கு துணி வெளுத்து பிழைப்பை நடத்துபவர்கள் என்று அகத்தியர்12000 என்ற நூலில் காணப்படுகிறது.



"சித்தான சித்து முனி போகநாதன்
சிறந்த பதிணெண் பேரில் உயர்ந்த சீலன்
கத்த னென்னும் காலங்கி நாதர் சீடன்
கனமான சீன பதிக் குகந்த பாலன்
முத்தான அதிசயங்கள் யாவற்றறுந்தான்
மூதுலகில் கண்டறிந்த முதல்வன் சித்தன்
நித்தமுமே மாசில்லா கடவுள் தன்னை
நீலணிலத்தில் மறவாத போகர் தானே"



சீன நாட்டிலுள்ள வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் போகர் மரபை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர் திருமூலர் காலத்தை சார்ந்தவர் என்றும் தமிழ் நாட்டிலிருந்து சீனாவிற்கு சென்று அங்கு பல காலம் வாழ்ந்து இருந்து சீன மொழியில் பல நூல்களை இயற்றி மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்து பழனி மலையில் வசித்நு வந்து பழனி தண்டாயுதபாணி சிலையை நவபாஷாணக் கட்டில் தயாரித்தார் என்றும் இவரது வரலாற்றில் கூறப்படுகிறது.

தமிழில் இவர் இயற்றிய நூல்களை விட சீனாவில் இவர் இயற்க்றிய நூல்களே அதிகம்.சீனாவில் அவருக்கு போ-யாங் என்ற பெயர் என்றும்.வா-ஓ-சியூ என்ற பெயரில் சிறந்த ஞானி என்றும் போகரை பற்றி போகர் சத்த காண்டம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
இவர் சீனா செல்வதற்கு முன் கொங்கணவர்,கருவூரார்,இடைக்காடர்,சட்டை முனி போன்ற சீடர்கள் அவருடன் இருந்ததாகவும் அங்கிருந்து சீடராக திரும்பி வந்தவர் புலிப்பாணி மட்டுமே என்றும் கூறுவர்.

இது தவிர போகர் சீனாவில் போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து சீன நாட்டவராகவே பல காலம் வாழ்ந்ததார் என்றும் புலிப்பாணி சித்தர் மீண்டும் அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறுவர்.
போகர் தம் சீடர் அறுபத்து மூவருக்கும் அஷ்டாங்க யோக கலையை கற்றுக் கொடுத்ததாகவும் தம்மிடம் கற்றுக் கொண்டனவற்றை வெளியில் சென்று பரிசித்து பாருங்கள் என்று சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்ப அவர்களும் நாடு முழுவதும் சுற்றி பார்த்து விட்டு பின்பு விண்ணுலகிற்கு சென்று அங்குள்ள ஆறு,குளங்களையெல்லாம் பார்த்து விட்டு மணணுலகிற்கு வந்து மேரு மலையை சுற்றி வணங்கி விட்டு கீழே இறங்கி போகரை கண்டு வணங்கி நின்றனர்.

தம் சீடர்களை கண்ட போகர் மகிழ்ந்து சிறிது காலம் சமாதி நிலையில் இருங்கள் என்று கூறி தாமும் சுகணங்க மரத்தின் கீழ் சிவயோக நிலையில் இருந்தார்.

தம் தவ வலிமையால் எண்ணிலடங்கா சித்திகளை பெற்று அவ்வறிய சக்தியை மக்கள் நல வாழ்விற்காக பயன் படுத்தினார்.

தம் சித்த சக்தியை பெருக்கி கொள்ள இமயமலை,மேருமலை போன்ற இடங்களுக்கு சென்று அங்கு தவம் புரியும் சித்தர்களிடமிருந்து காயகல்ப இரகசியங்களை கற்றுக் கொண்டார்.
மக்கள் கருத்து குருடராய் இருப்பதை கண்டு எப்படியாவது இவர்களுக்கு உதவி செய்து  அவர்களை திருத்தவேண்டும் என்று நினைத்தார்.

தவம் செய்பவர்களுக்கு அவர்களின் உதவிக்காக தங்கம் செய்யும் முறையை சொல்லி கொடுத்தார்.வியாதியஸ்தர்களுக்கு நோய் தீர்த்து மீண்டும் நோய் தாக்காமல் இருக்கும் வழிகளை கற்றுக் கொடுத்தார்.போகத்தில் திளைப்பவர்களுக்கு அதன் நன்மை தீமையை எடுத்துரைத்தார்.

தம் சீடர்களுக்கு காயகல்ப ரகசியங்களையும் குளிகை செய்யும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தார்.
குளிகையின் உதவியால் ஆகாய மார்க்கமாக கிளம்பி இமயமலை,மேருமலை  முதலிய இடத்திற்கு சென்று அங்குள்ள சித்த புருஷர்களை கண்டு தரிசித்தார்.
அவர்கள் போகருக்கு அதுவரை தெரியாதிருந்த காயகல்ப இரகசியங்கள் பலவற்றையும் குளிகை விபரங்களையும் சொல்லி கொடுத்தார்கள்."உலக மக்களுக்கு என்ன தான் நல்வழி காட்டினாலும் அவர்கள் உன் வழி வரமாட்டார்கள்.அவர்கள் தலைவிதி அவ்வளவு தான்.அவர்கள் உன்னை எவ்வளவு அவமான படுத்தினாலும் நீ கவலைபடாதே.உன் முயற்ச்சியில் தவறாதே"என்று கூறி வழியனுப்பினார்.

பின்னர் போகர் தமிழ்நாட்டை அடைந்து தானறிந்தவற்றை அடுத்தவர்களுக்கு பயன்படுத்தும் முறையில் இறங்கினார்.ஆனாலும் யாரும் போகரை லச்சியம் செய்ய வில்லை.

இருந்தாலும் போகர் தம் முயற்ச்சியில் இருந்து மனம் தளராமல் மந்திர ஜால வித்தைகளை காட்டுவது.இறந்தவர்களுடன் பேசுவது போன்ற அதிசயங்களை செய்து காண்பித்தார். வெகுத் தொலைவில் நடப்பவைகளை தெரிந்து கொள்ள ஆகாசப் பயணம்,தண்ணீரின் மேல் பயணம் போன்றவற்றிற்கான இயந்திர நூல்களை இயற்றினார்.அதில் பஞ்ச பிராணன்களை பற்றி எழுதி எந்த நேரத்தில் காரியம் செய்தால் வெற்றி கிட்டும் என்பதையும் விளக்கினார்.

ஒருநாள் இளம் வயதில் மரணமடைந்த இளைஞனின் மனைவி அழுது கொண்டிருந்தாள்.அவளின் விதவைக் கோலம் போகரை மிகவும் பாதித்தது.
இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவி மந்திரம் சித்தியை பெற மேரு மலையில் அருகில் இருக்கும் நவநாத சித்தர்களின் சமாதியை அடைந்தார்.
ஒன்பது சித்தர்களும் அவருக்கு தரிசனம் தந்தனர்.போகரும் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவி மந்திர வித்தயை கற்று தரும்படி அவர்களிடம் கேட்டார்.

"இந்த மக்கள் இப்படித்தான் இருப்பார்கள்.என்ன தான் துன்பம் வந்தாலும் திருந்தி வாழ மாட்டார்கள்.அலை அலேயாக இறந்து போவார்கள்.அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பெடுப்பார்கள்.அவர்களுக்காக நீ வருந்தாதே .தவத்தை செய்....போ" என்று போகருக்கு அறிவுரை கூறினார்கள்.
ஆனாலும் போகர் திரும்பவும் அம் மந்திரத்தை சொல்லி தரும்படி வற்புறுத்தினார்.

இதனால் பொறுமை இழந்த அந்த சித்தர்கள்,"போகா! தெய்வ நியதிக்கு எதிராக நீ செயல்படுகிறாய்.ந் கற்றுக் கொண்ட வித்தைகளால் தெய்வ நிந்தனை தான் அதிகமாகும்.எனவே நீ கற்றுக் கொண்ட எல்லாமே உனக்கு மறந்து போய்விடும்....போ"என்று சாபமளித்தனர்.

போகர் திடுக்கிட்டார்"உலக மக்களின் நன்மைகளின் பொருட்டு நான் பாடுபட்டதற்கு இது தான் பலனா?....அப்படியானால் நான் இங்கேயே இறந்துவிடுகிறேன்"என்று கூறி அழுதார்.

சித்தர்கள் அவரை தடுத்து "ஏராளமாக உள்ள.காயகல்ப முறைகளை அறிந்த நீ இறந்து போனால்,அது உலக மக்களுக்கு மட்டுமல்ல சித்தர்களின் உலகிற்கு கூட பேரிழப்பாகும்.எனவே தகுதி உள்ளவர்களுக்கு காயகல்ப முறைகளை சொல்லி கொடு.அவர்களை நீண்ட காலம் வாழ வை.மரணமடைந்தவர்களுக்காக வருந்தி கொள்ளாதே!"என்று அறிவுரை கூறினார்கள்.அதுவரையில் போகர் அறிந்திராத காயகல்ப முறைகளையும் கற்று கொடுத்து மறைந்தனர்.

போகர் சில காலம் அங்கேயே இருந்து பாதரசத்தை கட்டும் வழிமுறைகளை தெரிந்து கொண்டு அங்கிருந்து காளம்பி சீனா சென்றார்.அங்கே தம்மிடம் வந்து கேட்ட சித்தர்களுக்கு குளிகையை அளித்தார்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இன்னமும் ஏராளம் இருக்கின்றன என்று எண்ணிய போகர் மறுபடியும் மேருமலைக்கு போனார்.அங்கே காலங்கிநாதரின் சமாதியை கண்டார்.
அவர் மனம் ஒன்பது சித்தர்களின் ஒருவரான காலங்கிநாதரின் ஒரே மாணவன் நான் தான் என்று கர்வத்துடன் நினைத்தது.அங்கே அகங்காரம் தலை தூக்கியது.அவர் காலங்கிநாதரின் சமாதியை வணங்கி,"குருநாதா,பிறவியின் மர்மத்தை அறிந்து எல்லோரும் இன்பமாக இருக்க வேண்டும் என்பது தங்கள் மாணவனான என் ஆசை அது நிறைவேறினாள் தங்களுக்கு தானே பெருமை"என்று முறையிட்டார்.

அப்போது பலத்த சிரிப்பொலி நாலா பக்கங்களிலும் கேட்டது.போகர் அதிர்ச்சியோடு பார்த்தார்.ஆளரவமே இல்லாது கிடந்த அந்த இடத்தில் திடீரென்று பல சித்தர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.தம் கண்களில் தெரிந்த அத்தனை பேரையும் வலம் வந்து வணங்க வேண்டும் என்று போகர் எண்ணினார்.

அது நடக்க கூடிய காரியம் இல்லை என்பதை உணர்ந்த போகர் அவ்விடத்தையே சுற்றி வலம் வந்து அவர்களை வணங்கினார்.

"உலகை வாழ்விக்கும் சித்த புருஷர்களே,தாங்கள் எங்கே இருந்தீர்கள்?....."

"போகா!நாங்கள் எப்போதும் இங்கேயே தான் இருக்கிறோம்.குருநாதர் காலங்கிநாதரின் சீடர்கள் நாங்கள்.நாங்கள் குருநாதர் சமாதியை விட்டு ஒரு போதும் நகரவே மாட்டோபம்,அத்தனை சித்தர்களும் ஒருமித்த குரலில் போகருக்கு பதிலளித்தார்கள்.

"இதுவரை நான் ஒருவன் மட்டுமே காலங்கிநாதரின் சீடன் என்று நினைத்திருந்தேன்.இப்போது நீங்கள் என் குருநாதரின் சீடர்கள் என்று தெரிந்ததும் என் கர்வம் அடியோடு போய்விட்டது.அணைவரும் என்னை மண்ணியுங்கள்.இங்கே எத்தனை காலமாக இருக்கிறீர்கள்?"என்று போகர் அவர்களிடம் மிகுந்த பணிவுடன் கேட்டார்.

அரிச்சந்திரன்,இராவணன்,ராமர்,பாஞ்சாலன்,புரூரவஸ்,திருதராஷ்டிரன்,விராடன்,பாண்டவர்கள் அணைவரும் அவர்கள் குருநாதர் சொல்லி கொடுத்ததை இங்கே பரிட்சார்த்தமாக சோதனை செய்ய வந்த காலத்திலிருந்தே தாங்கள் இங்கே இருப்பதை சொன்ன சித்தர்கள் போகரை தம் அருகில் வரும்படி அழைத்தார்கள்.

"போகா! அங்கு பார்;இங்கு பார்;இதோ இந்த பக்கம் பார்;இங்கே திரும்பு;இப்படி பார்;என்று பல இடங்களை அவர்கள் சுட்டி காட்ட,அந்த இடங்களை போகர் பார்த்த போது செந்தூரம்,பஸ்பம்,தங்கம்,ரவரத்தினங்கள்,முதலியவை ஏராளமாக குவிந்து கிடந்தன.

இவைகள் யாவும் யாருக்கும் பயன் படாமல் இப்படி கிடக்கிறதே என்று பரபர்பான குரலில் போகர் பேசியதை கேட்ட சித்தர்கள்,"போகா!மக்கள் அறியாமை மயக்கத்தில் முழ்கி கிடக்கிறார்கள்.நல்லதை பெறுவதில் அக்கரை இல்லாத அவர்களை தேடி இவையெல்லாம் அங்கு போக வேண்டுமா?"என்று கேட்டு விட்டு போகரின் கண்ணில் இருந்து மறைந்தார்கள்.

யாவரும் சுலபத்தில் பார்க்க முடியாத சித்தர்களை பார்த்தும் அவர்களுடன் பேசி காலத்தை கடத்தி விட்டோமே என்று வருந்தினார் போகர்.
தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார்.சிறிது தூரம் புற்றிலிருந்து ஒளி கற்றையொன்று தெரிந்தது.அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் நின்றார்.யாரோ ஒரு சித்தர் இந்த புற்றினுள் தவம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர் அந்த புற்றினை வலம் வந்து அதன் அருகே ஆசனம் இட்டு அமர்ந்து,கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

நீண்ட நேரம் ஆனது.போகரின் தியானத்தால் புற்றிலிருந்த சித்தரின் தியானம் பாதிக்கப்பட்டது.உடனே புற்றை உடைத்து கொண்டு வெளியே வந்தார் அவர்.அவரின் திருமேனியின் ஒளியால் போகரின் தியானம் கலைந்தது.கண்களை திறந்த போகர் தம் எதிரே சித்தரை கண்டவுடன் காலில் விழுந்து வணங்கினார்.

புற்றிலிருந்து வெளி வந்த சித்தர் மூன்று காலங்களையும் உணர்ந்தவர்."நீ தான் காலங்கி நாதன் சீடனோ?...உனக்கு என்ன வேண்டும்?...ஏன்.என் தவத்தை கலைத்தாய்?.."என்று கோபமுடன் போகரை பார்த்து சித்தர் கேட்டார்.
"ஆம் சுவாமி நான் போகன் தான்.தங்கள் தவத்தை கலைத்ததற்காக என்னை மண்ணிக்க வேண்டும்.சித்தர்களை தரிசப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.தங்களை சந்தித்ததற்கு பெரு மகிழ்ச்சி.என் வாழ்வில் பெரும் பேறு பெற்றுவிட்டேன்.தாங்கள் எத்தனை நாட்கள் இருக்கிறீர்கள்?..."

"சிறிது காலம் தான்....இது என்ன மாதம்?"

'கலி யுகம் தொடங்கி என்றதுமே இடை மறித்த சித்தர்....."என்ன அதற்குள் கலியுகம் பிறந்து விட்டதா?...துவாபர யுகத்தின் ஆரம்பத்தில் இங்கே தியானம் செய்ய ஆரம்பித்தேன்'.என்று சொல்லி காலத்தின் வேகத்தை எண்ணிச் சிரித்தபடி சற்றும் முற்றும் நலா பக்கங்களையும் பார்த்தார்.மரமொன்று தெரிந்தது.

"போகா அதோ கீழே விழுந்த பழம் உனக்கு தான் போய்  எடுத்து சாப்பிடு"என்றார் சித்தர்.
அந்த பழத்தின் சுவையில் போகர் தன்னை மறந்தார்.

சித்தர் புலி தோல் ஆசனம் ஒன்றை நீட்டி,"இது உனக்கு தவம் செய்ய உதவும்"என்று சொல்லி கொண்டு இருந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரே தோன்றவே,"போகா!இனி உனக்கு தேவையானவற்றை இந்த பதுமை சொல்லும்"என்று சொல்லி விட்டு சித்தர் கண்களை மூடி மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார்.

பதுமை போகருக்கு கரு உண்டாவது முதல் அவ்வுயிர் படும் இன்ப துன்பங்கள் என்றும் கடைசி நிலைகள் வரை தெளிவாக விளக்கி விட்டு போகரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டு வந்தது போலவே மறைந்தது.

போகர் அங்கிருந்து தம் பயணத்தை தொடங்கி மேரு மலையின் மற்றொரு பகுதிக்கு போகும் போது,'போகா!இதற்கு மேல் போகாதே நில்...நில்...'என்று ஒரு குரல் தடுத்தது.

போகர் அங்கே திரும்பி பார்த்த போது அங்கே ஒரு பதுமை இருந்தது."ஏன் போகக் கூடாது ?"என்று போகர் கேட்டார்.
"போகா! நீ போகும் பக்கமெல்லாம் கண்ணுக்குத் தெரியாதபடி இருந்து கொண்டு சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.தெரியாமல் நீ அவர்கள் மேல் இடித்து விட்டால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.ஆகையால் மேலே போகாதே உனக்கு வேண்டியதை கேள் நான் தருகிறேன்?"என்றது பதுமை.

"மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மூலிகைகள் இருக்கும் இடத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்"என்றார் போகர்.

அதை மட்டும் கேட்காதே என்று மறுத்த அந்த பதுமை போகருக்கு வேறு பல மூலிகைகளின் ரகசியங்களையும்,அவற்றின் சாதனை வகைகளையும் சொல்லி விட்டு போகரை திருப்பி அனுப்பி விட்டது.

நினைத்தது நடக்காத வருத்தத்தில் சித்தர் கொடுத்த புலி தோலின் மீது கடும் தவம் புரிந்தார் போகர்.



மேருமலையை தங்கமயமான மலை என்று இதிகாச புராணங்கள் தெரிவிக்கின்றன.காரணம்,சித்தர்கள் அடிக்கடி தங்கள் ரசவாத வித்தையை செய்து பார்த்ததின் விளைவாக மேருமலை தங்கமயமாகி விட்டது.

அம்மலையை அடைந்த போகர் அம்மலையில் இருந்து வீசிய ஒளியால் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தார்.அங்கு அவரது மூர்ச்சை தெளிவித்த சித்தர் ஒருவர் அடுத்தவர் நலனுக்காக தம் வாழ்வை அர்பணித்து கொண்டிருக்கும் போகரை வாழ்த்தி ஒரு வஜ்ரகண்டி மாலையை அவரது கழுத்தில் அணிவித்தார்.

நான்கு யுகங்களை சேர்ந்த சித்தர்கள் அங்கு இருப்பதை போகருக்கு காட்டிவிட்டு அவர் மறைய,பல உயர்ந்த சித்தர்கள் போகரை ஒரு குகைக்குள் கூட்டி கொண்டு போய் உயிரை அளிக்கும் மூலிகையை காண்பித்து அவற்றின் விபரங்களை கூறினார்கள்.

பல காலமாக அலைந்து திரிந்து சுற்றியதின் பலன் கிடைத்து விட்டது என்று மனம் மகிழ்ச்சியில் திளைத்த போகர் அவர்களை வணங்கி விடை பெற்று கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.

மகிழ்ச்சியின் மிகுதியால் கிடுகிடுவென கீழே இறங்கி வந்த போகரின் வேகத்தில் தரை அதிர்ந்தது.அதன் விளைவாக குகை ஒன்றில் தவம் புரிந்து கொண்டிருந்த சித்தர் ஒருவரின் கடுந்தவம் கலைந்தது.தவம் கோபத்தில்" போகா!அமைதியான இந்த இடத்தின் தன்மையை நீ அடியோடு கெடுத்துவிட்டாய்.அதற்கு காரணம் உன் மித மிஞ்சிய மகிழ்ச்சி தானே.மரணம் அடைந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் உன் வித்தை மட்டும் பலிக்காமல் போகும்.போ....என்று கடும் சாபமிட்டு அங்கிருந்து போகும்படி கட்டளையிட்டார்.
போகரின் எண்ணக் கோட்டையில் இடி விழுந்தது.அவரது மனக்கோட்டை மணல் கோட்டைகளாயின.சற்று நேரத்திற்கு முன் மனதில் மண்டி கிடந்த மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம் நொடி பொழுதில் மின்னலாய் மறைந்தன.

இந்த உலகமே வெறுத்து ஒதுக்கி விட்டது போல்  அவமானத்துடன் தள்ளாடிய படியே நடந்து வந்த போகர் அப்படியே மயங்கி விழுந்தார்.

கண்ட பேரண்ட பறவை ஒன்று சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து போகரின் மயக்கத்த்தை தெளிவித்து அவரது வரலாறு அணைத்தையும் கேட்டறிந்து.பின் அவருக்கு சித்தர்கள் சாதனை அடைவதன் மூல ரகசியங்களை கூறி விட்டு,"போகா!இங்கு இருக்காதே.உடனே கீழே போய்விடு.சாதாரண கண்களுக்கு தெரியாமல் இங்கே கோடிக்கணக்கான சித்தர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.அங்கும் இங்கும் அலைந்து அவர்களின் தவத்தை கெடுத்துவிடாதே.இப்படியே போ ...என்று வழிகாட்டி விட்டு பறந்து போய்விட்டது.
மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தார் போகர்.வரும் வழியில் திருமூலர் பாட்டனாரின் சமாதியை கண்டு அங்கே தவமிருந்து அவரை தரிசித்தார்.

"போகா! சொன்னதை கேள் திருந்தமாட்டேன் என்று அடம்பிடிக்கும் மக்களிடம் எங்களை அறிமுகப் படுத்தாதே.முடிந்தவரை நீயும் அவர்களிடமிருந்து விலகி இரு.அது தான் உனக்கு நல்லது" என்று சொன்ன திருமூலரின் பாட்டனார் உடனே மறைந்தார்.

உலகத்தினரின் செயல்களை கண்டு மனம் நொந்து போயிருக்கும் சித்தர்களை நினைத்து போகரின் உள்ளம் வேதனையுற்றது.

பொதிகை மலைக்கு ஆகாய மார்கமாக சென்று ஓரிடத்தில் அமர்ந்து கூர்ம நாடி வென்று தவநிலையில் மனதினை ஒரு முகப்படுத்தலானார்.அதன் பின் தியானத்தில் இருந்து எழுந்தவர் முன் உமா தேவி காட்சி தந்து"போகா!பழனி மலைக்கு சென்று முருகனை தியானம் செய்.முருகன் உனக்கு அருள் புரிவான்"என்று வழிகாட்டி மறைந்தார்.
அதன்படி போகர் பழனி மலைக்கு சென்று கடும் தவம் புரிந்தார்.அங்கே பழனியாண்டவர் தண்டாயுதபாணியாகக் காட்சியளித்து உபதேசித்தார்.

"போகரே!நீ என்னை தரிசனம் செய்தது போல் அணைவரும் தரிசிக்க வேண்டும் அல்லவா?அதற்கு ஏற்பாடுகள் செய்"என்று கூறி அங்கு தன் வடிவத்தை எந்தெந்த முறையில் விக்ரமாக செய்ய வேண்டும்.மூல விக்ரகத்தை எவ்வாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.வழிபாட்டு முறைகள் இவற்றையெல்லாம் கூறிய முருக பெருமான் காயகல்ப உபாயத்தை கூறி மறைந்தார்.



பழனியாண்டவர் சொன்னபடியே"நவபாஷணம்"என்னும் ஒன்பது விதமான கற்களை கூட்டு பொருட்களாக கொண்டு பழனியாண்டவர் விக்ரகத்தை அழகாக செய்து முடித்த போகர் முருகப் பெருமான் சொன்னபடியே பிரதிஷ்டையும் செய்து முடித்தார்.வழிபாட்டு முறைகளையும் வகுத்தார்.

தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த விபூதியைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார்.பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து,இறைவனின் திருமேனியில் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தை உணவாக உண்டார்.

நவபாஷணத்தை கூட்டி உருவாக்கி திருமேனியில் ஊறிய பஞ்சாமிர்தமும்,விபூதியும் போகருக்கு உள்ளொளி பெருக்கியது.
இதே போன்ற நவபாஷாண சிலையை திருச் செங்கோடு அர்த்த நாரீஸ்வரரை உருவாக்கியதும் இவரே என்று சொல்லப்படுகிறது.


இறைவன் சன்னிதானத்திற்கு அருகே தனக்கென தவத்திற்கான இடத்தை ஒன்றை அமைத்து கொண்டு தன் கடைசி காலத்தை பழனியில் கழித்த போகர் அங்கேயே தன் அனுபவங்களை உபதேசித்தார்.

போகர் ரசக்குளிகையின் மகத்துவம் அறிந்தவர்.இரசக்குளிகை செய்து பல சித்துக்களை செய்து அதன் ஆற்றலை கண்டு அதிசயித்தவர்.

அழிந்து போக கூடிய உடலை அழியாத கல்பமாக்கி காலம் கடந்து வாழ்ந்து வந்த சித்தர்களின் அருட் கொடையாக பல எண்ணற்ற வைத்திய வாகடங்களை எழுதி இருக்கிறார்.

தமது இலகிமா சக்தியினால் ஆகாயத்தில் பறந்து சென்று உலகை வலம் வந்திருக்கிறார்.லகிமா சக்தியால் புவி ஈர்ப்பு விசையை மீறி இயங்குவது சாத்தியமே!லகிமா சித்தியுடைய சித்தர்கள் இதன் காரணமாகவே கனமான உடலை பஞ்சு போலாக்கிக் கொண்டு நினைத்த மாத்திரத்தில் ஆகாயத்தில் சஞ்சரிக்க முடிகிறது.
போகர் அடிக்கடி சீன நாட்டிற்கு நினைத்த நேரத்தில் பக்கத்து தெருவிற்கு போவது போல் போய் விட்டு வந்திருக்கிறார்.
ஆகாய வானில் நடப்பதும்,படுத்தும்,நிற்பதுக்குமான வித்தையை எல்லாம் அடக்கிய ஆகாய கசினப் பயிற்சி வித்தையில் வல்லவர் போகர்.

வெள்ளையர்கள் வாழும் நாடுகளுக்கு போய் இவர் உபதேசம் செய்ததாகவும் ஒரு நூல் கூறுகிறது.

போகர் பழனியில் இருந்த போது தன் சீடன் புலிப்பாணியிடம் "நான் மூலிகை சேகரிக்க போய்கிறேன்.நீ இங்கே பூஜைகளை பார்த்துக் கொள்"என்று கூறி விட்டு ஆகாய மார்க்கமாக செல்லும் போது சீன நாட்டில் கூட்டம் கூட்டமாக இருப்பதை பார்த்து விட்டு கீழே இறங்கினார்.

அங்கே அழகான பெண்களை கண்டு இங்கேயே கொஞ்ச காலம் தங்கலாம் என்று எண்ணி அங்கேயே அப் பெண்களுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார்.

பழனியில் இருந்த புலிப்பாணியோ,பல வருடங்கள் ஆகியும் தம் குருநாதர் இன்னும் திரும்பவில்லையே என்று எண்ணி மைசூரில் இருந்து வந்து தொண்டு செய்து கொண்டிருந்த உடையார் என்பவருக்கு உபதேசம் செய்து அவரை பழனி முருகனுக்கு பூஜையை செய்ய சொல்லி விட்டு பின்னர் தன் குருநாதரை தேடி சீனாவிற்கு சென்றார்.

அங்கு சீனப் பெண்களுடன் போக வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கும் தன் குருநாதரை புலிப்பாணி மாறு வேடத்தில் சென்று பழனிக்கு வரும்படி அழைத்தார்.அங்கே மகாசீனசாரம் என்னும் வஜ்ரோலி முத்திரையை பழகும் போது போகர் தன் சக்தி முழுவதையும் இழந்துவிட்டார்.இவ்விதம் போகர் தன் தவ சக்தி முழுவதையும் இழந்துவிட்ட நிலையில் புலிப்பாணி அவருக்கு  தவசக்தியை திரும்ப பெற தான் ஏற்பாடு செய்வதாக கூறி குருநாதரை தன் முதுகில் சுமந்தபடி பழனிக்கு வந்து விட்டார்.

இழந்த வலிமையை திரும்ப பெற தன் சீடரையே தனக்கு உபதேசாக்கும் படி போகர் சொல்ல அதற்கு புலிப்பாணியோ இது முறையல்ல என்று மறுத்து விட்டார்.
இதனால் போகர் தண்டத்தை வைத்து,அதற்கு புலிப்பாணியை உபதேசிக்க செய்து,பின்பு அத் தண்டத்திலிருந்து உபதேசம் பெற்றார்.பிறகு பல காலம் தவமிருந்து தன் பழைய நிலையை பரிபூரணமாக பெற்றார்.

பேகரின் பெருமை அறிந்த சித்தர்கள் பலர் அவரிடம் வந்து குளிகை பெற்று போயிருக்கிறார்கள்.
போகர் சிங்கம்,புலி,பசு போன்றவற்றிற்கும் உபதேசம் செய்து ஞானம் அளித்திருககிறார்.சதுரகிரி,சிவகிரி முதலிய இடங்களில் எல்லாம் இவர் இருந்திருக்கிறார்.
கொங்கணர்,கருவூரார்,சுந்தரானந்தர்,மச்ச முனி,நந்தீசர்,இடைக்காடர்,கமலமுனி,சட்டை முனி,ஆகியோர் இவரது மாணக்கர்கள்.

போகர் சீனாவில் வாழ்ந்த போது சீன மக்களுக்கு சித்துக்கள் மூலம் பல்வேறு நன்மைகளை செய்துள்ளார்.கடற்பயணம் செய்ய நீராவி கப்பல் ஒன்றையும் பறக்கும் இயந்திரம் ஒன்றையும் உருவாக்கி தந்துள்ளார்.



பழனியில் சில காலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார்.அவரது சமாதி பழனியாண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

(இந்த படத்திலுள்ள போகர் சிலையின் நெற்றி பகுதியில் ஒளி கீற்று ஒன்று ஏற்பட்ட போது எடுத்த உண்மை படம்)

போகர் பூஜித்து வந்த புவனேஸ்வரி அன்னையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் காணலாம்.போகர் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும,புவனேஸ்வரி சந்நிதி உள்ள இடத்திற்கும் இடையில் சுரங்க பாதை இருப்பதாக கூறப்படுகிறது.
போகருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணியும் அவருக்கு பின் அவரது மரபில் வந்தோரும் திருமலை நாயக்கர் காலம் வரை பழனி முருகனை பூஜித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

போகர் இயற்றிய நூல்களின் பட்டியல் அகத்தியரின் சௌமிய சாரத்தில் காணப்படுகிறது.அவை போகர்12000,போகர் சுப்த காண்டம்7000,போகர் நிகண்டு1700,போகர் வைத்தியம்1000,போகர் வைத்தியம் 700,போகர் சரக்கு வைப்பு 800,போகர் ஜனன சாகரம்550,போகர் கற்பம்360,போகர் உபதேசம்150,போகர் இரணவாகடம்100,போகர் ஞான சாராம்சம்100,போகர் கற்ப சூத்திரம்54,போகர் வைத்திய சூத்திரம்77,போகர் முப்பு சூத்திரம்37,போகர் அட்டாங்க யோகம்24,போகர் பூஜாவிதி20.
மேற்கண்ட நூல்கள் போகர் 12000 மற்றும் இரணவாகடம் 100எனும் இரு நூல்கள் மட்டுமே கிடைக்கவில்லை.
தியானச்செய்யுள்

சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…

மகா போகர் சித்தர் பூசை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பட பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ, அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!
4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
9. பசும்பால் பிரியரே போற்றி!
10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

ஸ்ரீ போகரின் பூசை முறைகள்

இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும்.

1. நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
7. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
8. இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

போகர் வரலாறு முற்றிற்று.

2 கருத்துகள்:

  1. போகரைப்பறி கொஞ்சம் தேரிந்தேன் இன்னும் அவரைப்பற்றி தேறிந்துகேல்லா விருப்பம்

    பதிலளிநீக்கு